தேசிய பல்கலையின் முதல் மெய்நிகர் விழா: 186 பேருக்கு பட்டம்

தேசிய பல்கலையின் முதல் மெய்நிகர் விழா: 186 பேருக்கு பட்டம்

2 mins read
95c44521-4a2f-47d6-963d-413251a68155
அதிபரும் தேசிய பல்கலைக்கழக வேந்தருமான ஹலிமா யாக்கோப் பட்டம் பெற்ற மாணவரிடையே உரை யாற்றினார். படம்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் -

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 186 மாணவர்கள் நேற்று மெய்நிகர் ரீதியில் பட்டம் பெற்றனர்.

இந்தப் பல்கலைக்கழகம் இப்போதுதான் முதல்முறையாக இந்த வழியில் பட்டமளிப்பு விழாவை நடத்தியது. இதுபோன்ற 60 மெய்நிகர் பட்டமளிப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.

அவற்றில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு பட்டக்கல்வியை முடித்த 23,500க்கும் மேற்பட்ட மாண வர்கள் பட்டம் பெறுவார்கள். சென்ற ஆண்டு பட்டக்கல்வியை முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிபர் ஹலிமா யாக்கோப், பட்டம் பெற்ற மாணவர்களிடையே நேற்று உரையாற்றினார்.

கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரர்களின் வாழ்க்கை முறை மாறி இருப்பதையும் எதிர்காலத்தை அது மாற்றி இருப்பதையும் அதிபர் தனது உரையில் சுட்டினார்.

தலைசிறந்த திட்டங்கள் இருந்தாலும் சில நேரங்களில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத சம்பவங்களால் எல்லாம் தலைகீழாகிவிடும் என்பதையே கொரோனா நினைவூட்டுவதாக அதிபர் கூறினார்.

சவால்மிக்க இந்தக் காலகட்டத்தில் பரஸ்பர மரியாதை, நேர்மை, புத்தாக்கம், உன்னதம், மீள்திறன் ஆகிய நன்னெறிகளைக் கடைப்பிடிக்கும்படி மாணவர்களை அதிபர் கேட்டுக்கொண்டார்.

2020ஆம் ஆண்டு பட்டக்கல்வியை முடித்த 11,582 மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள். அவர்களில் 6,973 பேர் இளநிலை பட்டதாரிகள். 4,609 பேர் முதுநிலைப் பட்டதாரிகள்.

இப்பல்கலைக்கழகம் ஜூன் 17 முதல் ஜூலை இறுதி வரை நேரடி பட்டமளிப்பு விழாவை நடத்த தொடக்கத்தில் திட்டமிட்டது.

ஆனால் கொவிட்-19 தொற்று சென்ற மாதம் அதிகமானதை அடுத்து விழாவை மெய்நிகர் வழியில் நடத்த அது பிறகு முடிவு செய்தது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவரான பேராசிரியர் டான் எங் சாய், இந்தச் சிரமமான காலத்திலும் மாணவர்கள், நிலைமைக்கு ஏற்ப மாறிக்கொண்டு உறுதியுடன், கடப்பாட்டுடன் கல்வியில் உன்னதத்தைச் சாதித்து இருக்கிறார்கள் என்று நேற்றைய நிகழ்ச்சியில் உரையாற்றியபோது தெரிவித்தார்.