தியோங் பாருவில் எங் வாட் ஸ்திரீட் குடியிருப்பாளர்களுக்கு
தியோங் பாருவில் உள்ள ஒரு புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு நேற்று காலை முதல் கொவிட்-19 பரிசோதனை தொடங்கியது.
அங்குள்ள எங் வாட் ஸ்திரீட் புளோக் 66ன் குடியிருப்பாளர்களில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரிடம் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் மேலும் கிருமி தொற்றும் அபாயத்தைக் குறைக்க அங்கு பரிசோதனை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.
நேற்றுக் காலை 9 மணிக்கு பரிசோதனை தொடங்கியபோது வந்த முதல் பிரிவினரில் 59 வயது திருவாட்டி ஜெனின் ஸ்டெய்னும் ஒருவர்.
"நான் முதல் முறையாக எச்சில்/சளி மாதிரி கிருமித்தொற்று பரிசோதனை எடுப்பதால், அது வலிக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்ததுபோல் வலி ஏதும் உணரவில்லை," என்றார் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டிருந்த திருவாட்டி ஸ்டெய்ன். அவரது பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்பது உறுதியானது.
இருப்பினும் மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கார்டியன் மருந்தகத்தில் திருவாட்டி ஸ்டெய்ன் ஒரு கொவிட்-19 சுய பரிசோதனைக் கருவியையும் நேற்று காலை வாங்கியிருந்தார்.
"இந்தப் பகுதியில் கிருமித்தொற்று சம்பவங்கள் குறையும் அல்லது இல்லாமல் போகும் வரை நான் வெளியே அதிகம் செல்வதைக் குறைத்துக்கொள்ளப் போகிறேன்," என்றும் கூறினார் திருவாட்டி ஸ்டெய்ன்.
விற்பனைத் துறை மேலாளராகப் பணியாற்றும் 47 வயது திருவாட்டி ஏடலின் டான், நேற்று காலை 10 மணிக்கு தமது எட்டு வயது மகள், இல்லப் பணிப்பெண் ஆகியோருடன் கிருமித்தொற்று பரிசோதனைக்கு சென்றிருந்தார்.
அப்போது வீட்டில் தமது ஐந்து வயது மகனைப் பார்த்துக்கொண்ட அவரது கணவர் பின்னர் கிருமித் தொற்று பரிசோதனையை எடுத்துக்கொண்டார்.
2D பூன் தியோங் ரோட்டில் உள்ள கூடத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிருமித்தொற்று பரிசோதனை நடைபெறும்.
இம்மாதம் 8ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை, எங் வாட் ஸ்திரீட் புளோக் 66க்குச் சென்ற வருகையாளர்களும் அதன் குடியிருப்பாளர்களுடன் கலந்துறவாடியவர்களும் கிருமித்தொற்று பரிசோதனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

