சிறை சென்ற பல் மருத்துவர் மீது தொழில் நடவடிக்கை

சிறை சென்ற பல் மருத்துவர் மீது தொழில் நடவடிக்கை

1 mins read
1bfd5626-8a63-42e4-9590-db33ed63bae2
-
Google News Preferred Icon

செய்யாத பல் மருத்துவ சிகிச்சைக்கு போலி 'சாஸ்' கட்டண கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததற்காக கடந்த ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பல் மருத்துவர் டியோ யூ ஜீன், சிங்கப்பூரின் பல் மருத்துவர் பதிவேட்டில் இருந்து இம்மாதம் 23ஆம் தேதிமுதல் நீக்கப்பட்டுள்ளார்.

அவர் குறைந்தது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பல் மருத்துவராகத் தொழில் செய்ய முடியாது. இந்த காலகட்டத்துக்குப் பிறகு டாக்டர் டியோ, பல் மருத்துவர் பதிவேட்டில் தமது பெயரை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சிங்கப்பூர் பல் மருத்துவ மன்றம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்தின் கட்டணக் கழிவுகள் $18,000 தொடர்பில் அரசாங்கத்தை ஏமாற்றியதால், கடந்த ஆண்டு சிறைக்கு அனுப்பப்பட்ட முதல் நபராக திரு டியோ அறிவிக்கப்பட்டார்.

டாக்டர் டியோ மீது சுமத்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 46 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2014 முதல் 2015 வரை முன்பு 'ஃபீனிக்ஸ் டென்டல் சர்ஜரி' மருந்தகத்தில் வேலை செய்த டியோ அக்குற்றங்களைப் புரிந்தார்.