சாங்கி மருத்துவமனையின் பணியாளர்கள் சிலருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டபோதும் அங்குள்ள பெரும்பாலான நோயாளிகளைப் பார்க்கச் செல்பவர்களுக்கான வழிமுறைகள் மாற்றப்படவில்லை.
பொது வார்டுகளில் உள்ள நோயாளிகளை ஒரு நேரத்தில் ஒரு வருகையாளர் காண செல்லலாம் என்று அந்த மருத்துவமனை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் கிருமித்தொற்றுகள் ஏற்பட்ட செய்தி வெளிவந்ததை அடுத்து மருத்துவமனை தனது வழிமுறைகளை மாற்றியுள்ளதாக மதர்ஷிப்.எஸ்ஜி இணையத்தளம் வெளியிட்டது தவறு என்று சாங்கி மருத்துவமனை, தனது பதிவில் குறிப்பிட்டது.
பொது வார்டுகளில் நோயாளிகளைக் காண வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று மதர்ஷிப்.எஸ்ஜி கூறியது துல்லியமான தகவல் இல்லை என்று அந்த மருத்துவமனை கூறியது.
வெளிநோயாளி முன்பதிவுகள் தொடர்வதாகவும் மருத்துவமனை கூறியது.
தவறானத் தகவலைப் பதிப்பித்த இணையக் கட்டுரையில் தற்போது அதன் செய்தி ஆசிரியரின் குறிப்பும் இடம்பெற்றுள்ளது. "சாங்கி மருத்துவமனையின் பொது வார்டுக்குள் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்தச் செய்திக் கட்டுரையின் முன்னைய தலைப்பு குறிப்பிட்டிருந்தது.
இதனை அடுத்து நாங்கள் தற்போது செய்திக் கட்டுரையின் தலைப்பை மாற்றியுள்ளோம். கொவிட்-19 நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த நோயாளிகளைத்தான் வருகையாளர்கள் காண முடியாது என்ற பொருளில் மாற்றினோம். அத்துடன் கட்டுரையிலுள்ள தகவல்களைப் புதுப்பித்துள்ளோம் " என்று அந்தக் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.
சாங்கி பொது மருத்துவமனையில் மூன்று மருத்துவமனை ஊழியர்களுக்கு கொவிட்-19 இருந்தது உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் 21 வயது தாதி. மற்ற இருவர் மருத்துவ உதவியாளர்கள்.

