முதியோரைத் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள ஊக்குவிக்கும் முயற்சியாக இணையக் காணொளிகளில் உள்ளூர் பிரபலங்களுடன் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். அதன் தொடர்பில் கவ்.எஸ்ஜி வெளியிட்டுள்ள காணொளிகளில் அமைச்சர்களும் பங்குபெற்றுள்ளர்.
இரண்டு நிமிடம் நீடிக்கும் காணொளிகள் நான்கு மொழிகளிலும் வெளியாகியுள்ளன.
தமிழ்மொழிக் காணொளியில் போக்குவரத்து அமைச்சர் திரு எஸ். ஈஸ்வரன் தொலைக்காட்சி பிரபலம் திரு சரவணன் அய்யாவுடன் உரையாடி, தடுப்பூசிகளின் பாதுகாப்பு பற்றியும் செயல்திறன் பற்றியும் விவரித்தார்.
மற்ற காணொளிகளில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, சுகாதாரம், மனிதவளம் ஆகியவற்றுக்கான மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், சுகாதாரம், தொடர்பு, தகவல் அமைச்சுகளுக்கான நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஸாம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கவ்.எஸ்ஜியின் யூடியூப், ஃபேஸ்புக் தளங்களில் காணொளிகள் இடம்பெற்றுள்ளன.

