சாங்கி பொது மருத்துவமனை: விதிமுறைகளில் மாற்றமில்லை
சாங்கி மருத்துவமனையின் பணியாளர்கள் மூவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டபோதும் அங்குள்ள பெரும்பாலான நோயாளிகளைப் பார்க்கச் செல்பவர்களுக்கான வழிமுறைகள் மாற்றப்படவில்லை.
பொது வார்டுகளில் உள்ள நோயாளிகளை ஒரு நேரத்தில் ஒரு வருகையாளர் காண செல்லலாம் என்று மருத்துவமனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.
கிருமித்தொற்று ஏற்பட்ட செய்தி வெளிவந்ததை அடுத்து, மருத்துவமனை தனது வழிமுறைகளை மாற்றியுள்ளதாக மதர்ஷிப்.எஸ்ஜி இணையத்தளம் செய்தி வெளியிட்டது. அச்செய்தி தவறு என்று சாங்கி மருத்துவமனை தனது பதிவில் குறிப்பிட்டது. கொவிட்-19 தொற்றிய சாங்கி மருத்துவமனையின் ஊழியர்களில் ஒருவர் 21 வயது தாதி.
வெளிநாட்டு ஊழியர்களின் மனநலன் காக்க மனிதவள அமைச்சு திட்டம்
இங்குள்ள 300க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் உள்ள ஊழியர்களின் மனநலனைப் பேண புதிய திட்டம் நேற்று தொடங்கியது.
மனிதவள அமைச்சும் சு சீ மனிதநேய இளையர் நிலையமும் மற்ற சில அமைப்புகளுடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இணையம் வழி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்ளூர் வெளிநாட்டுக் கவிஞர்கள் தங்கள் படைப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். மனநலம் பற்றிய உரையுடன், மனஅமைதி, தியானம் தொடர்பான உத்திகளும் கற்றுத்தரப்பட்டன. ஊழியர் தங்குவிடுதிகளில் கடந்த ஆண்டு கொவிட்-19 கிருமி பெருமளவில் பரவிய பிறகு, அங்குள்ள சுமார் 300,000 வெளிநாட்டு ஊழியர்கள் வெளியில் செல்ல முடியாமல் உள்ளனர்.
மின்தூக்கி தீவிபத்து எதிரொலி: 1,700 நடமாட்ட சாதனங்கள் வீசப்பட்டன
உட்லண்ட்சில் அண்மையில் மின்தூக்கி ஒன்றில் நடந்த தீவிபத்துக்குப் பின்னர் இங்கு சுமார் 1,700 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் வீசப்பட்டுள்ளன. கடந்த 3ஆம் தேதி நடந்த தீவிபத்தில் ஆடவர் ஒருவர் மாண்டார்.
ஜூன் 4 முதல் ஜூன் 24 வரை, 1707 தனிநபர் நடமாட்ட சாதனங்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கேஜிஎஸ் கழிவு நிர்வாக நிறுவனம் தெரிவித்தது.
வரும் 30ஆம் தேதி வரை அத்தகைய சாதனங்களைப் பெற்று இலவசமாக கழிக்கவுள்ளது அந்நிறுவனம்.
யுஎல்2272 ரக சான்றிதழ் பெறாத நடமாட்ட சாதனங்களைப் பாதுகாப்பாக அகற்றும்படி அந்த நிறுவனம் பயனாளர்களைக் கேட்டுக்கொண்டது.

