கொவிட்-19க்கு எதிரான இரு தடுப்பூசிகளையும் முழுமையாகப் போட்டுக்கொண்டவர்களுக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்பட்டாலும் அதனால் அவர்களுக்கு பொதுவில் கடுமையான பாதிப்பு ஏற்படாது.
இருப்பினும் அவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருந்த சமயத்தில் அவர்கள் மற்றவர்களுக்கு கிருமியைப் பரப்பக்கூடும் என்று தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் தேசிய பொதுச் சுகாதார ஆய்வுக்கூடத்தின் இயக்குநர் இணைப் பேராசிரியர் ரேமண்ட் லின் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 'சிரோலஜி' பரிசோதனையின் முடிவுகளை வைத்து நிலையம் கவனமாக பரிசீலித்து வருகிறது என்றும் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
சிரோலஜி பரிசோதனையின் மூலம் நோயாளி ஒருவரின் ரத்தத்தில் 'ஆன்டிபாடிகள்' எந்த அளவுக்கு உள்ளது என்று கண்டுபிடிக்க முடியும்.
கிருமி ஒருவரைத் தாக்கும்போது இந்த 'ஆன்டிபாடிகள்' படை வீரர்கள் போல் செயல்பட்டு அதை அழித்து விடும் தன்மை கொண்டவை.
இந்தப் பரிசோதனைகளின் மூலம் நோயாளியின் முன்னைய பாதிப்புகள் பற்றியும் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளாரா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
சில சந்தர்ப்பங்களில் சிரோலஜி பரிசோதனைகள் மூலம் ஒருவரது ரத்தத்தில் 'ஆன்டிபாடிகள்' இயற்கையான தொற்றால் உருவானதா அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உருவானதா என்பதை அறிவியலாளர்களும் மருத்துவ ஆய்வாளர்களும் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும்.
மற்ற பரிசோதனைகள் தற்போதைய கிருமித்தொற்று பற்றிதான் தெரிவிக்கும் ஆற்றல் பெற்றது.
"இதுவரை நாங்கள் கவனித்ததில், இரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்படுமானால், அவர்களாலும் மற்றவர்களுக்குக் கிருமியைப் பரப்ப முடியும் என்று தெரிய வந்துள்ளது.
"ஆனால், அவர்களுக்கு அதனால் கடுமையான பாதிப்பு நிகழாது," என்றும் பேராசிரியர் லின் விவரித்தார்.

