சிங்கப்பூர் இளையர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் குழு விடுத்துள்ள கோரிக்கை ஒருதலைப்பட்சமானது என்று கொவிட்-19 தடுப்பூசி நிபுணர் குழுவும் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் மூத்த நோய்த்தொற்றியல் நிபுணரும் கருத்துரைத்துள்ளனர்.
அமெரிக்காவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாள்களுக்குப் பிறகு 13 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததைச் சுட்டி, அந்த மருத்துவர்கள் குழு திறந்த மடல் ஃபேஸ்புக்கில் கடந்த சனிக்கிழமை பதிவிட்டிருந்தது.
அந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையமும் மற்ற நாடுகளில் உள்ள அமைப்புகளும் ஏற்கத்தக்க தரவுகளை முன்வைக்கும் வரை சிங்கப்பூரில் இளையர்களுக்குத் தடுப்பூசி போடுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று அக்கடிதத்தின் வாயிலாக மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அச்சிறுவன் இதயம் செயலிழந்து போனதால் உயிரிழந்ததாக அமெரிக்கா குறிப்பிடவில்லை என்று சுகாதார அமைச்சு இன்று (ஜூன் 28) வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
"அவ்விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்," என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் அபாயங்களைவிட அதனால் கிட்டும் பயன்களே அதிகம் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் முடிவுக்கு வந்திருப்பதை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
"கடுமையான கொவிட்-19 பாதிப்பை ஏற்படுத்தவல்ல உருமாறிய 'டெல்டா' கிருமி அதிகமாகப் பரவி வரும் வேளையில், தீவிர கொரோனா பாதிப்பில் இருந்து நம் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்," என்றும் அமைச்சு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
"ஒருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது 'டெல்டா' கிருமியிடம் இருந்து 33% பாதுகாப்பை வழங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இருமுறையும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்," என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடிதத்தை எழுதிய மருத்துவர்கள் கொவிட்-19 தடுப்பூசி குறித்துப் பொதுமக்களுக்குத் தவறான தகவல்களை வழங்கி, தவறாக வழிநடத்திச் செல்கின்றனர் என்று தேசிய தொற்றுநோய்த் தடுப்பு மையத்தின் இணைப் பேராசிரியர் டேவிட் லை கூறியுள்ளார்.
அக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள மருத்துவர்கள், பெரும்பான்மை மருத்துவர்களைப் பிரதிநிதிக்கவில்லை என்ற பேராசிரியர் லை, அவர்கள் 'எம்ஆர்என்ஏ' வகை கொரோனா தடுப்பூசிகளைப் போடுவதை நிறுத்த வேண்டும் எனத் திரும்ப திரும்பக் கோருவதன் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தைப் பகிர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

