சமூகத்தில் நால்வர் உட்பட புதிதாக ஒன்பது பேருக்கு கிருமித்தொற்று
சமூக அளவில் நால்வர் உட்பட சிங்கப்பூரில் நேற்று புதிதாக ஒன்பது பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகத்தில் தொற்று உறுதியான அந்த நான்கு பேரும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர்.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை. வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த ஐவரில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,553 ஆக உள்ளது.
சாங்கி மருத்துவமனை கிருமித்தொற்று குழுமம் பத்து நபருடன் அதிகரிப்பு
சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்ட கொவிட்-19 அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ள சமூக அளவிலான 12 தொற்றுச் சம்பவங்களில் ஐந்து சாங்கி பொது மருத்துவ மனை கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவை.
அவர்களில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் ஊழியரான 24 வயது மாது, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் பயிலும் 16 வயது மாணவர், சாங்கி பொது மருத்துவமனையின் சுகாதாரப் பராமரிப்பு உதவியாளரான
69 வயது மாது ஆகியோரும் அடங்குவர். சாங்கி பொது மருத்துவமனை கிருமித்தொற்றுக் குழுமத்தில் இப்போது பத்துப் பேர் உள்ளனர்.
இதர ஏழு சமூக தொற்றுச் சம்பவங்களில் ஸாங்ட தொடக்கப் பள்ளியின் 12 வயது மாணவியும் அடங்குவார். அவர் புக்கிட் மேரா வட்டாரத்தில் வசிக்கிறார். அவரது தொற்று புக்கிட் மேரா உணவங்காடி நிலையம் மற்றும் சந்தையுடன் தொடர்புடையது. அவருக்கு முதலாவது தடுப்பூசி இம்மாதம் 10ஆம் தேதி போடப்பட்டது.
தொடர்புத்தடம் கண்டறியப்படாத ஒரே நபர் 37 வயது கடற்துறை ஊழியர்.
புதிய டெங்கி கிருமி திரிபுகளால் சம்பவங்கள் அதிகரிக்கலாம்
பொதுவாக சிங்கப்பூருக்கு வெளியிலிருந்து வரும், அதிகம் அறியப்படாத டெங்கி தொடர்பான புதிய கிருமித் திரிபுகள் இங்கு பெரிய அளவிலான டெங்கி பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகம் அறியப்படாத நான்கு டெங்கி கிருமித் திரிபு களில் டென்வி-1 (DenV-1), டென்வி-2 (DenV-2) மாதிரிகள் தான் இங்கு அதிகமாகத் தென்படுகிறது. 2016லிருந்து ஏற்பட்டுள்ள கிருமி பாதிப்பில் பெரும்பாலானவை டென்வி-2 திரிபால்தான் உண்டானவை.
அப்படி என்றால் டெங்கி பாதிப்பிலிருந்து குணமடைந் தோர் பலரின் உடலில் இந்தத் திரிபு தொடர்பான எதிர்ப்பு சக்தி இருக்கும். இருப்பினும், இவ்வாண்டு பிப்ரவரி மாதத் திலிருந்து இங்கு நிகழ்ந்த டெங்கி சம்பவங்களில் பாதிக்கு மேற்பட்டவையில் டென்வி-3 (DenV-3), டென்வி-4 (DenV-4) மாதிரிகள் தென்பட்டன.
முப்பது ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் டென்வி-3 தொடர்பான டெங்கி சம்பவங்கள் ஏற்பட்டன. ஆனால், டென்வி-4 தொடர்பான டெங்கி சம்பவங்கள் ஜனவரியில் 4.8 விழுக்காட்டிலிருந்து டிசம்பரில் 23.1 விழுக்காட்டுக்கு நான்கு மடங்கு அதிகரித் தது. டென்வி-3 தொடர்பான டெங்கி சம்பவங்கள் 47 விழுக் காடாக இருந்தது.
இந்த ஆண்டு தொடங்கியது முதல் இப்போது வரை 2,700க்கு மேற்பட்ட டெங்கி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகை யில் குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டில் டெங்கிப் பரவல் அதிகமாக இருந்தது. ஆண்டு முழுமைக்கும் அந்த எண்ணிக்கை 35,315 ஆக இருந்தது.
புக்கிட் மேரா வியூ வாசிகளுக்கு வாகனப் பயிற்சி நிலையத்தில் தடை
புக்கிட் மேரா வியூ வட்டாரத்தில் வசிப்போர் புக்கிட் பாத்தோக் வாகனமோட்டும் பயிற்சி நிலையத்தில் (பிபிடிசி) நுழைய நேற்று முதல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நேற்று இது குறித்து தனது இணையப் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிபிடிசி, "வாகனமோட்டும் பாடங்களுக்கும் பயிற்சிகளுக்கும் முன்பதிவு செய்த அவ்வட்டாரவாசிகள் உடனடியாக தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு செய்யாமல் அவர்கள் நிலையத்துக்குள் நுழைந்தால் முன்பதிவு கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படாது. பாதிக்கப் பட்ட வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்," என்று கூறியது.

