இனவாதத் தாக்குதல்களில் இடம்பெறுவோரைத் தண்டிப்பதில் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை தொடர வேண்டும். மற்றவர்களும் அத்தகைய காரியங்களில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் அவர்களுக்குத் தொடர்ந்து தண்டனை கிடைக்க வேண்டும்.
சிங்கப்பூரில் இனவாதச் செயல்களை ஒடுக்குவதில் இந்த அணுகுமுறை முக்கியம் என்று கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இனவாதச் செயல்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு அடிக்கடி சிறைத்தண்டனை கொடுக்கப்படுகிறது. மற்றவர்களும் அல்லது அதே குற்றவாளிகளும் அத்தகைய செயல்களில் மீண்டும் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கூடிய இதர தண்டனைகளும் கொடுக்கப்படுகின்றன.
அத்தகைய தண்டனைகளை விதிக்கும் அணுகுமுறையை தொடர்ந்து தான் ஆதரிக்கப்போவதாக தலைமைச் சட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
நம் சமூகத்திற்கும் சமய நல்லிணக்கத்திற்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அத்தகைய தண்டனை மூலம் தடுக்க முடியும் என்று அந்த அலுவலகம் குறிப்பிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
பல இன குழுக்களுக்கு இடையில் கசப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே செய்யப்படும் செயல்கள் சகித்துக்கொள்ளப்படமாட்டா.
அத்தகைய காரியங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டப்படி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அலுவலகம் தெரிவித்தது.
பேருந்து ஒன்றில் ஒரு மாதை நோக்கி மற்றொரு மாது ஏழு நிமிடங்கள் இனவாத ரீதியில் வசைபாடிய சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது.
அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மாதுக்கு நான்கு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதி, இத்தகைய குற்றச்செயல்களுக்கு நம் சமூகத்தில் அறவே இடம் கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதன் தொடர்பில் தலைமைச் சட்ட அலுவலகம் கருத்து கூறியது.
இதனிடையே, இதுபற்றி கருத்துரைத்த குற்றவியல் வழக்கறிஞர்கள், பொதுவாக சிங்கப்பூரில் உள்ள நீதிமன்றங்கள் இனவாதக் குற்றச்செயல்களைச் சகித்துக்கொள்வதில்லை என்று குறிப்பிட்டனர்.
ஒருவரின் இனம், தேசியம் அல்லது சமயத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் அவதூறான கருத்துகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் குற்றவாளிக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்பதையும் அவர்கள் சுட்டினர்.
ஒருவரின் சமய, இன உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவர்கள் காதில் விழும்படி பேசுவது, சைகை காட்டுவது போன்ற குற்றச்செயல்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.
இனக் குழுக்களுக்கு இடையில் விரோதப் போக்கை வேண்டுமென்றே ஏற்படுத்துவோருக்கு, நல்லிணக்கத்திற்குப் பாதகமான செயல்களில் ஈடுபடுவோருக்கு இதேபோன்ற தண்டனை விதிக்க முடியும்.
சிங்கப்பூரில் பல இனங்களுக்கு இடையில் கசப்புணர்வையும் வெறுப்புணர்ச்சியையும் உண்டு பண்ணும் வகையில் பேசுவது, கருத்துகளை வெளியிடுவது கீழறுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்.
இத்தகைய குற்றத்தை முதல் முறை புரிவோருக்கு $5,000 அபராதம், மூன்றாண்டு வரை சிறை அல்லது இரண்டையும் தண்டனையாக விதிக்க முடியும்.

