ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தொடர் தோல்வியை உறுதிசெய்வதற்கான உலகளாவிய முயற்சிகள்
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தொடர் தோல்வியை உறுதிசெய்யும் உலகளாவிய முயற்சிகளுக்கான சிங்கப்பூரின் ஆதரவை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மறுஉறுதிப்படுத்தி உள்ளார்.
அந்தப் பயங்கரவாத இயக்கத்தின் பிடியில் இப்போது எந்தப் பகுதியும் இல்லை என்றபோதும், அது உலகளவில் தொடர்ந்து ஒரு பரவலான இருப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றும் அச்சுறுத்தலாக நீடிக்கிறது என்றும் டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற 83 நாடுகளின் 'ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைத் தோற்கடிப்பதற்கான உலகக் கூட்டணி' அமைச்சர்நிலை கூட்டத்தில் கலந்துகொண்டபோது டாக்டர் விவியன் இவ்வாறு பேசினார்.
வலுவான பாதுகாப்பு நடவடிக்கை தேவை என்றும் ஆனால் அது போதாது என்றும் சொன்ன அவர், பயங்கரவாத எதிர்ப்பில் அணுக்கமான சமூக ஈடுபாட்டின் மூலமும் உள்நாட்டுப் பாதுகாப்பு எதிர்வினை ஆயத்தநிலை மூலமும் சிங்கப்பூர் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் குறிப்பிட்டார்.
ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் வேவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் கண்காணிப்பு, பகுப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக சிங்கப்பூரில் இவ்வாண்டு பயங்கரவாத எதிர்ப்பு தகவல் மையம் நிறுவப்பட்டதை அவர் சுட்டினார்.
"தாமாகத் தீவிரப்போக்கை நாடிய தனிமனிதர்களை அடையாளம் காண சமூகத்துடனும் சமய அமைப்புகளுடனும் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றுவோம்," என்றார் அமைச்சர்.
"உலகம் முழுவதும், இந்த வட்டாரம் முழுவதும் உள்ள மக்களின் மனங்களையும் இதயங்களையும் நாம் ஈர்க்க வேண்டும். பல்வேறு குழுக்களுக்கு இடையே நம்பிக்கையையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, தவறான கண்ணோட்டங்களும் தப்பெண்ணங்களும் எங்கு தோன்றினாலும் அவற்றை வேரறுக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் இயக்கம் அடைந்த தோல்வி எட்டு மில்லியன் மக்களை விடுவித்துள்ளது என்று கூட்டணி ஒரு கூட்டறிக்கை வழியாகத் தெரிவித்தது.
ஆயினும், பாதுகாப்பு அமைப்புகளையும் பொதுமக்களையும் குறிவைக்கும் வகையில் அந்தப் பயங்கரவாத இயக்கம் மீண்டும் தன்னைக் கட்டியெழுப்பி, செயல் வல்லமை பெறாதபடி தடுப்பதற்குப் போதிய வளங்கள் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் இணைந்து செயலாற்றுவதில் சிங்கப்பூரின் கடப்பாட்டை உறுதிப்படுத்திய அமைச்சர் விவியன், "ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைத் தோற்கடிப்பதற்கான உலகக் கூட்டணிக்குப் படைவீரர்களையும் உடைமைகளையும் வழங்கிய முதல் தென்கிழக்காசிய நாடாக, நமது கூட்டுமுயற்சியின் மூலம் ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் அமைப்பை அழித்தொழித்ததில் சிங்கப்பூர் மகிழ்ச்சி கொள்கிறது," என்றார்.
ஆனாலும், ஐஎஸ் தொடர்ந்து அச்சுறுத்தலாக நீடிக்கிறது என்றும் மின்னிலக்க உலகம் வழியாக தனது கட்டமைப்பை விரிவுபடுத்தி, தீவிரவாதத்தைப் பரப்பி வருகிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐஎஸ்ஸில் சேர்ந்து சண்டையிட்டபின் தாய்நாட்டிற்குத் திரும்புவோர் இப்போதைய அபாயம் என்றும் டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

