ஹாங்காங்கை மையமாகக் கொண்ட குற்றக் கும்பலின் வேலை மோசடி நடவடிக்கையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சிங்கப்பூரில் 27 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின்வணிகத் தளங்கள் வழியாக விற்பனையை அதிகரிக்க உதவுவதன் மூலம் விரைவில் பணம் சம்பாதிக்கலாம் என உறுதி அளிக்கும் 'வேலைகளை' வழங்கி வந்த அந்தக் குற்றக் கும்பலைத் தடுத்து நிறுத்த ஹாங்காங் போலிசாருடன் இணைந்து பணியாற்றியதாக சிங்கப்பூர் போலிஸ் நேற்று ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.
பிற்பாடு கூடுதல் தொகையுடன் பணம் திருப்பித் தரப்படும் என்ற மோசடிக்காரர்களின் போலி வாக்குறுதியை நம்பி, அவர்களின் வலையில் வீழ்ந்த பலரும், அவர்கள் சொன்னபடி முதலில் பொருள்களை வாங்கினர். ஆனால், சொன்னதுபோல பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
சிங்கப்பூரில் விசாரிக்கப்பட்டு வரும் 16 முதல் 53 வயதுக்குட்பட்ட 27 பேரில் 23 பேர் ஆண்கள், நால்வர் பெண்கள்.
அவர்கள் வங்கிவழி பணப் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்தது, பணத்தை வங்கிக் கணக்குகளில் இருந்து எடுத்தது அல்லது குற்றக் கும்பலிடம் தங்களது வங்கிக் கணக்குகளை ஒப்படைத்தது போன்ற செயல்களில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மொத்தம் 134 வேலை மோசடி வழக்குகளில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்தக் குற்றக் கும்பலின் முக்கிய உறுப்பினர்கள் 14 பேரை ஹாங்காங் போலிசார் ஏற்கெனவே கைது செய்துவிட்டனர்.
சமூக ஊடகங்களில் வேலை விளம்பரங்களை மோசடிக்காரர்கள் வெளியிடுவர். வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்வதன் வழியாக இணைய வணிகத்தளங்களில் விற்பனையை அதிகரிக்க உதவுவதுதான் அந்த வேலை என மோசடிப் பேர்வழிகள் கூறுவர். அதற்காக 5% முதல் 12% வரை தரகுப்பணம் தருவதாக அவர்கள் உறுதியளிப்பர்.
இந்த மோசடியுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேதிக்கப்படும் 270 தொலைபேசி எண்களை வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவின் மோசடித் தடுப்பு மையம் துண்டித்துவிட்டது. அத்துடன் 80க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

