தொடக்கநிலை 1 மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது. கொவிட்-19 பரவல் காரணமாகக் கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் மாணவர் சேர்க்கை முழுவதும் இணையம் வழியாக இடம்பெறும்.
இந்த ஏழு கட்ட நடவடிக்கையின் முதற்கட்டமாக, பள்ளி மாணவர்களின் உடன்பிறந்தோர்க்கான சேர்க்கை இன்று காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. இந்த முறையின்கீழ் பதிவுசெய்யும் குழந்தைகள் அனைவர்க்கும் பள்ளிகளில் இடம் கிடைப்பது உறுதி.
தங்கள் பிள்ளைக்காகப் பதிவுசெய்ய, பெற்றோர்கள் இணையவழி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அக்குழந்தையின் மூத்த சகோதரி அல்லது சகோதரன் படிக்கும் பள்ளியைக் குறிப்பிட வேண்டும். சேர்க்கை விவரங்களைப் பள்ளி வழங்கும்.
நாளை மாலை 4.30 மணியுடன் முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடவடிக்கை நிறைவடையும்.
ஒட்டுமொத்தத்தில், இவ்வாண்டு 181 தொடக்கப் பள்ளிகளில் 41,888 இடங்கள் உள்ளன. பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு ஐந்து குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்த 37,681 குழந்தைகளும் அடுத்த ஆண்டில் தொடக்கநிலை 1ல் சேரத் தகுதிபெறுவர்.
2A1 கட்ட மாணவர் சேர்க்கை ஜூலை 7ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கும். இந்தக் கட்டம், பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்களாக இருப்பவர்களின் அல்லது பள்ளி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அல்லது நிர்வாகக் குழுவில் இருப்போரின் பிள்ளைகளுக்கானது.
அதனைத் தொடர்ந்து, 2A2 கட்டம் ஜூலை 14-15 தேதிகளில் இடம்பெறும். இதில் பங்கேற்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தோர், பள்ளிகளின் முன்னாள் மாணவர்களாக இருக்க வேண்டும் அல்லது பெற்றோர், பள்ளி ஊழியராகப் பணியாற்ற வேண்டும். தொடக்கப் பள்ளி வளாகங்களிலேயே மனிதவள அமைச்சால் நடத்தப்படும் பாலர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் இந்தக் கட்டத்தில் பங்கேற்கலாம்.
பள்ளிகளில் தொண்டூழியர்களாகப் பணியாற்றும் பெற்றோர்கள், பள்ளிகளுடன் இணைந்த தேவாலயங்கள் அல்லது குலமரபுச் சங்கங்களின் உறுப்பினர்கள், சமூகத் தலைவர்களாக இருப்போரின் குழந்தைகளுக்கான 2B கட்ட மாணவர் சேர்க்கை ஜூலை 26ஆம் தேதி நடைபெறும்.
கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து, பள்ளிகளுடன் முன்னர் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத குழந்தைகளுக்காக 2B கட்டத்தில் 20, 2C கட்டத்தில் 20 என ஒவ்வொரு பள்ளியும் 40 இடங்களை ஒதுக்கி வருகிறது.
2A1, 2A2, 2B ஆகிய மூன்று கட்ட மாணவர் சேர்க்கையிலும் பெற்றோர்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளிகளுடன் எவ்வகையிலும் தொடர்பில்லாத குழந்தைகள், ஆகஸ்ட் 3 முதல் 5 வரை இடம்பெறும் 2C கட்ட மாணவர் சேர்க்கையின்போது பதிவுசெய்ய வேண்டும்.
அதுவரையிலும் பதிவு செய்யாதவர்கள், ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கும் '2C துணை' கட்டத்தின்போது தொடக்கநிலை 1 இணைய முறை மூலமாகப் பதிவுசெய்யலாம்.
முன்னைய கட்டங்களில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அனைவர்க்கும் இடம் ஒதுக்கப்பட்ட பிறகு இடம்பெறும் 3ஆம் கட்டத்தின்போது அனைத்துலக மாணவர்கள் பதிவுசெய்யலாம்.

