செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
40ca4683-608c-432d-a6f8-5d5671ea72c7
-

லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாடு

சிலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகிய நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் அடங்கிய 'பசிபிக் கூட்டணி' வர்த்தகத் தொகுதியுடன் இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்ளும். இரு தரப்புகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சந்தை வாய்ப்புகளைக் கைக்கொள்ளவும் மின்வணிகம், சுங்கம், வர்த்தக வசதிகள், கடல்துறை சேவைகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த உடன்பாடு வழிவகுக்கும் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்து இருக்கிறார். கடந்த டிசம்பரில் பசிபிக் கூட்டணி - சிங்கப்பூர் இடையேயான தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தன. சென்ற 2019ஆம் ஆண்டில், பசிபிக் கூட்டணியுடனான சிங்கப்பூர் $6.1 பில்லியன் அளவிற்குச் சரக்கு வணிகம் செய்தது. இது, லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான சிங்கப்பூரின் மொத்த சரக்கு வணிகத்தில் 33.2% எனக் கூறப்பட்டது.

நிரந்தரவாசிக்கு $7,000 அபராதம்

சென்ற ஆண்டு கொவிட்-19 பரவலின்போது சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தபின் அதிகாரிகளிடம் பொய்த் தகவல் அளித்த தென்கொரியர் ஒருவர்க்கு $7,000 அபராதம் விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் நிரந்தரவாசியான கோ கியூங் ஹோ, 46, கடந்த ஆண்டு தென்கொரியாவில் இருந்து வந்தபின் நவம்பர் 25 முதல் டிசம்பர் 9 வரை கட்டாய இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டியிருந்தது. ஆனால், பிரத்தியேக இடங்களில் அந்த உத்தரவை நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி விண்ணப்பத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். வீட்டில் தனியாக அல்லது தம்முடன் பயணம் செய்த குடும்ப உறுப்பினர்களுடன் கட்டாயத் தனிமை உத்தரவை நிறைவேற்றுவதாக அவர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, ரிவர் வேலி சாலைக்கு அருகே ஷங்ஹாய் சாலையில் உள்ள சார்ல்ஸ்டன் கூட்டுரிமைக் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிற்கு நவம்பர் 26ஆம் தேதி அமலாக்க அதிகாரிகள் சென்றனர். அவருடன் மனைவியும் இரு பிள்ளைகளும் அவ்வீட்டில் தங்கியிருந்தனர். ஆனால் அம்மூவரும் அவரைப் போன்றே பயணம் செய்திருக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொலைக்காட்சி பொருத்துநர்க்குத் தொற்று: 'பெஸ்ட் டெங்கி' விளக்கம்

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 37 வயது தொலைக் காட்சிப் பொருத்துநர்க்கும் 'பெஸ்ட் டெங்கி' ஊழியர்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று அந்த மின்னணுக் கருவி விற்பனை நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. கொரோனா தொற்றிய அந்த ஆடவர் 'ஃபன்பிஸ் மார்க்கெட்டிங்' நிறுவன ஊழியர் என்றும் அந்நிறுவனம் தொலைக்காட்சி பொருத்தும் சேவையை வழங்கி வருகிறது என்றும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வழியாக 'பெஸ்ட் டெங்கி' விளக்கமளித்துள்ளது. நேற்று முன்தினம் சமூகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப் பட்ட நால்வரில் அந்த ஆடவரும் ஒருவர். அவர் 'பெஸ்ட் டெங்கி' பணியாளர்களுடன் நேரடித் தொடர்பு எதுவும் கொண்டிருக்கவில்லை என்றபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தளவாட நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக எச்சில்/சளி மாதிரிப் பரிசோதனை செய்துகொள்வர் என்று 'பெஸ்ட் டெங்கி' தெரிவித்துள்ளது.