அண்மையில் வேலையிடங்களில் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றமும் ஆறு வர்த்தகச் சங்கங்களும் கடந்த வாரம் இதற்குத் தீர்வு காண சந்தித்தன.
கட்டுமானம், கடல்துறை, செயல்முறை பொறியியல், உற்பத்தி, போக்குவரத்து, தளவாடம் ஆகியவற்றின் தொழில்துறைகள், தங்கள் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், வேலை செயல்முறை போன்றவற்றை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அதன் 10,700க்கு மேற்பட்ட தனது உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டது.
இது குறித்து கருத்துரைத்த மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, அண்மைய வேலையிட விபத்துகள் அதிகரிப்பு கவலை அளிக்கிறது என்றார்.
இந்த ஆண்டு இதுவரை 23 வேலையிட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. ஒப்புநோக்க கடந்த ஆண்டின் முற்பாதியில் 16 வேலையிட விபத்துகள் நிகழ்ந்தன.
இதற்கிடையே, கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் பாதுகாப்பான வேலை நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான சில பயிற்சிகள் இணையத்துக்கு மாற்றப்படும் என்று திரு ஸாக்கி, நேற்று நடைபெற்ற வருடாந்திர வர்த்தக பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
"கட்டுமானம், உற்பத்தி, போக்கு வரத்து, சரக்கு சேமிப்பு போன்ற பல்வேறு துறைகளில் நிகழ்ந்த விபத்துகளில் ஒன்பது பேர் உயிரிழந்தது மிகவும் ஏமாற்றமளிக்கக்கூடியதாக உள்ளது.
"இதில் கவலையளிக்கக்கூடியது என்னவென்றால், இந்த விபத்துகள் அனைத்தும் அடிப்படை பாதுகாப்பு குறைபாடுகளால் நிகழ்ந்தவை. இந்த விபத்துகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
"உயிர்க்கொல்லி எரிவாயு சோதனையின்றி, மூடப்பட்ட இடத்துக்குள் ஊழியர்கள் சென்றது, உயிர்காப்பு ஆடை இல்லாமல் நீருக்குள் சென்றது, பாதுகாப்பு இடைவாரைக் கொண்டு தங்களை வலுவாகப் பிணைத்துக்கொள்ளாமல் உயரமான இடத்தில் வேலை செய்தது போன்றவை அந்த அடிப்படை பாதுகாப்புக் குறைபாடுகள்," என்று அமைச்சர் விவரித்தார்.
பாதுகாப்பு விதிமுறை விளக்கம் போன்ற கட்டாயப் பயிற்சி வகுப்புகள் ஊழியர்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்ள உதவும் என்று குறிப்பிட்ட திரு ஸாக்கி, பயிற்சி இடங்களில் கொவிட்-19 கிருமித்தொற்று அபாயத்தைக் குறைக்கும் வகையில் சில பயிற்சி வகுப்புகள் இணையத்தில் நடத்தப்படும் என்று விவரித்தார்.
"முதலில், இத்தகைய வகுப்புகள் அடிப்படை ஊழியர்களுக்கு நடத்தப்படும். பின்னர் அவை மேலதிகாரிகளுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் நடத்தப்படும்.
"இருப்பினும், சாதனம் அல்லது இயந்திரம் சார்ந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பாளர்கள் நேரடி அனுபவப் பயிற்சி பெற வேண்டியிருப்பதால், அத்தகைய பயிற்சிகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கேற்ப நடத்தப்படும்," என்றார் அமைச்சர்.
ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அதேவேளையில், நிறுவனங்களில் மேல்மட்ட அதிகாரிகள் அபாய நிர்வாக முறைகளையும் அமல்படுத்த வேண்டும். அதற்கு முதலாளிகள், ஊழியர்களின் பாது காப்பை எப்போதும் மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும் என்றாரவர்.

