சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான சமூக சேவை வாய்ப்புகள்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான சமூக சேவை வாய்ப்புகள்

2 mins read
20629835-4ffa-4439-ab28-641fbc9aef25
-

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) நேற்று தொடங்கப்பட்டுள்ள ஒரு புதிய நிலையத்தில் ஆட்டிசம் எனும் அறிவு வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள், குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகள், சமூக சேவை முகவைகளின் ஊழியர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

சமூக நல்லெண்ணம் மற்றும் கொடையாளருக்கான கணினி நிலையம் என்று அழைக்கப்படும் இதில் நடத்தப்படும் இந்த வகுப்புகளில் அப்பல்கலையின் கணினித் துறை மாணவர்கள் பங்கேற்று பலனடைவார்கள்.

இந்த வகுப்புகளில் ஒன்றில், ஆட்டிசம் வள நிலையம், பாத்லைட் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த ஆட்டிசம் குறைபாடு உள்ள மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் வேலை வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ள தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் திறன்களைப் பட்டக்கல்வி மாணவர்கள் கற்றுக்கொடுப்பார்கள்.

இந்தப் புதிய நிலையம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகியவற்றுடன் தொடர்புடைய திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் திருமதி லீ சூன் குவான் அறக்கட்டளை நிதி அமைப்பு வழங்கிய $1.5 மில்லியன் நன்கொடையிலிருந்து அமைக்கப்பட்டுள்ளது.

அந்த நன்கொடை அளிக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நேற்று கலந்துகொண்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், அனைவரையும் உள்ளடக்கிய மின்னிலக்க சமூகத்தை நோக்கிய நமது முயற்சி தொடர வேண்டும் என்றார்.

"மின்னிலக்க இடையூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மின்னிலக்க தொழில்நுட்பத்தின் சக்தியைக் கொண்டு புதிய வாய்ப்புகளை நாம் உருவாக்கும் வேளையில், அது மின்னிலக்க பிளவை ஏற்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

"எதிர்கால மின்னிலக்க சவால்களை நாம் ஒன்றுசேர்ந்து கடந்துசெல்ல நாம் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். இந்தப் புதிய நிலையம் தொழில்நுட்பத் தலைவர்களைக் கொண்டு ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்," என்று கூறினார் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங்.