தங்கள் அடிப்படை ராணுவப் பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னால் முழுநேர தேசிய சேவைக்குப் பதிந்திருப்போருக்கு முதல் கொவிட்-19 தடுப்பூசி போடப்படும்.
கொவிட்-19 கிருமித்தொற்றுடன் வாழப் பழகிக்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக சிங்கப்பூர் ஆயுதப் படை மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. செலாராங் ராணுவ முகாமில் முழுநேர தேசிய சேவையில் இணைவதற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டவர்களுக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடப்பட்டது. அவர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.
அவர்கள், அடிப்படை ராணுவப் பயிற்சி நடத்தப்படும் தெக்கோங் தீவில் காலடி எடுத்துவைக்கும் முன்பாக கொவிட்-19 பரிசோதனையும் செய்யப்பட்டது. இதன்வழி தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்களை அடிப்படை ராணுவப் பயிற்சி மையம் (பிஎம்டிசி) விரைவில் அடையாளம் காண முடியும்.
தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், சிங்கப்பூர் ஆயுதப்படை தினத்துக்காக முன்கூட்டியே அளித்த நேர்காணலின்போது மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ஆயுதப் படை மற்றும் தற்காப்பு அமைச்சை சேர்ந்த 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்கள் என்றும் ஜூலை இரண்டாம் வாரத்திற்குள் 92 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டு முடித்திருப்பார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்ட குழுமமாக சிங்கப்பூர் ஆயுதப் படை இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
செயல்பாட்டு ராணுவப் பிரிவுகளையும் எதிர்காலத் தளபதிகளையும் உருவாக்க பிஎம்டிசி முக்கிய அங்கம் வகிக்கிறது என்றும் தடுப்பூசி பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க முழுநேர தேசிய சேவையில் இணையவிருப்போருக்காகவும் அவர்களது பெற்றோருக்காகவும் மெய்நிகர் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் பிஎம்டிசி தளபதி கர்னல் யீ கொக் மெங்க் கூறினார். எனினும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் ஆக்கப்படாது.
ராணுவப் பயிற்சியிலிருந்து வார இறுதியில் வீடு திரும்பும் வீரர்கள், வீட்டிலேயே தங்கி தனிமைப்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாட்டு ஆணை மே மாதம் அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்று. அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே வீரர்கள் தங்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த பின்னர் வெளியே செல்ல முடியும். வீட்டில் இருக்கும் ஆணையை மீறுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். மீண்டும் மீண்டும் மீறுவோர் மீது பயிற்சிப் பள்ளி நடவடிக்கை எடுக்கும்.

