சிங்கப்பூர் ஆகாயப்படை விமானத் தளத்தில் சுற்றுக்காவல் பணிக்காக ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தும் முன்னோட்டத் திட்டம் தொடங்கவுள்ளது.
இதனால் அத்து மீறி நுழைவோரைக் கண்டுபிடித்து அவர்களின் நடமாட்டத்தை நோட்டமிட முடியும் என்று கூறப்பட்டது.
காணொளிப் பகுப்பாய்வு முறையில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்படுவர்.
ஊடுருவிகளைச் சமாளிக்கத் தயார்நிலையில் உள்ள பாதுகாப்பு துருப்புகளுக்கு நேரடி காணொளி மூலம் ஆளில்லா வானூர்திகள், வேறு இடத்தில் நடப்பதைக் காட்டிடும்.
விமான ஓடுபாதையில் சேதத்தை மதிப்பிடுவதற்காகத் தேவைப்படும் மனிதவளம், நேரம் ஆகியவற்றை மிச்சப்படுத்தும் நோக்கிலும் பாய லேபார் விமானத் தளத்தில் ஆளில்லா வானூர்திகள் சோதிக்கப்படுகின்றன.
ஓடுபாதையில் ஏற்பட்டிருக்கும் பள்ளத்தின் அளவு போன்ற சேதத்தை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவை இந்த வானூர்திகள் பெற்றிருக்கும்.
மனித இயக்கம் தேவைப்படாத தொழில்நுட்பங்களைத் தங்கள் 'அறிவார்ந்த' விமானத் தளத்தில் பயன்படுத்தும் திட்டம் குறித்து சிங்கப்பூர் ஆகாயப்படை பகிர்ந்துகொண்டது.
இத்தகைய அறிவார்ந்த விமானத் தள மேம்பாடுகள் மூலம் எதிர்காலத்திற்கு ஆயத்தமாகும் படிகளை ஆகாயப்படை எடுத்து வருவதாக பாய லேபார் விமானத் தளத்தின் தளபதி கர்னல் மார்க் லிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போர்விமானங்களில் ஆயுதங்களை ஏற்றும் மற்றுமொரு புத்தாக்கத் திட்டமும் இவ்வாண்டு தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

