'தி பைன்ஸ் கிளப்' முன்னதாக ஸ்டீவன்ஸ் ரோட்டில் செயல்பட்டு வந்தது. பின்னர், தானா மேராவிலுள்ள பகிர்வு வளாகத்திற்கு அது இடம் மாறியது. இதைத் தொடர்ந்து திரு பீட்டர் குவீ மற்றும் அவரது நிறுவனமான 'எக்ஸ்குளூசிவ் ரிசோர்ட்ஸ்' மீது சங்க உறுப்பினர்கள் 170 பேர் வழக்கு தொடுத்தனர். நஷ்ட ஈடாக ஆளுக்குத் தலா $110,000க்கும் மேலான தொகையை அவர்கள் கோரியிருந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் நேற்று $1,500 வழங்கப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது. வஞ்சகம், அலட்சியம், தவறாகச் சித்திரித்தல், ஒப்பந்த விதிமீறல் ஆகியவற்றின் தொடர்பில் வழக்கு தொடுத்தோர் நஷ்ட ஈடு கோரியும் ஒப்பந்த விதிமீறலுக்கு மட்டுமே திரு குவீயின் நிறுவனம் பொறுப்பு ஏற்கும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
இதனால் தங்களுக்கு இழப்பு நேர்ந்தது என்று வழக்குத் தொடுத்தோர் நிரூபிக்கத் தவறியதாக நீதிபதி குறிப்பிட்டார்.
சங்கத்தின் உரிமையாளர் 'எக்ஸ்குளூசிவ் ரிசோர்ட்ஸ்' நிறுவனமாகும். நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பங்குதாரர் திரு குவீ ஆவார். குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையால் 2003க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் சங்கத்திற்கு ஏறத்தாழ $61 மில்லியன் இழப்பு நேர்ந்தது. திரு குவீயின் இலக்கு 8,000 உறுப்பினர்கள் என்றபோதும் 2012ல் சங்கத்தில் 1,490 உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததாகக் கூறப்பட்டது.

