அரசாங்கத்திற்கு எதிரான தன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் போலிஸ் நிலையம் ஒன்றை எரியூட்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கத் திட்டமிட்டார் பாதுகாப்பு அதிகாரி சிவபிரகாஷ் மயில்ராவணன். பின்னர், காலாங் அக்கம்பக்க போலிஸ் சாவடியைக் குறிவைத்தார். சாவடிக்கு வெளியே பல்வேறு பொருட்களைப் பற்ற வைத்தார். இதனால் கடந்தாண்டு மார்ச் 13ஆம் தேதியன்று இரவு 11.13 மணிக்கும் 11.23 மணிக்கும் இடையே 16 முறை வெடி வெடித்தது.
அத்துடன் நின்றுவிடாமல் டவ்னர் ரோடு, புளோக் 105ன் தரைத் தளத்தில் அமைந்துள்ள அந்த போலிஸ் சாவடியின் கண்ணாடிப் பகுதிகளைக் கோடரியால் உடைத்து, அருகிலுள்ள ஏழு தூண்கள் மீது 'ஐஎஸ்ஐஎஸ்' என்று சாயம்கொண்டு எழுதியிருந்தார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட 31 வயது சிவபிரகாஷுக்கு நேற்று மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. இந்த வன்செயலில் எவருக்கும் காயமில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் அருகிலிருந்த காருக்குக் கிட்டத்தட்ட $20,000 மதிப்பிலான சேதம் நேர்ந்ததாகக் கூறப்பட்டது.
சிவபிரகாஷ் 2009ஆம் ஆண்டு முதல் சமூக விவகாரங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். காலப்போக்கில் சிங்கப்பூரின் பல்வேறு அரசாங்கக் கொள்கைகள் நியாயமற்றவை, செல்வந்தர்களுக்குச் சாதகமானவை என்றும் அதிகாரிகள் அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் என்றும் அவர் எண்ணினார். இதனால் சிங்கப்பூர் அரசாங்கம் மீது சிவபிரகாஷுக்கு ஆழமான கசப்புணர்வு உருவானது. எம்ஆர்டி நிலையம் அருகில் போலிஸ் சாவடி இருப்பதால் தன் செயலால் வழிப்போக்கர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம் என்று எண்ணினார்.
சம்பவ இடத்தில் போலிஸ் கார்கள் இருந்தால் அவற்றையும் நொறுக்குவது, போலிஸ் சாவடியின் கண்ணாடிகளை உடைப்பது, கூட்டம் கூடினால் அவர்கள் முன்னால் உரை நிகழ்த்துவது, கைதானதும் தன் குமுறல்களை நீதிமன்றத்தில் கூறுவது ஆகியவை ஆடவரின் திட்டங்களாக இருந்தன. ஆனால், நேற்று நீதிமன்றத்தில் சிவபிரகாஷ் மௌனமாக இருந்தார்.
முஸ்தஃபா சென்டருக்கு கடந்தாண்டு மார்ச்சில் சென்ற சிவபிரகாஷ், குப்பைப் பைகள், வாசனைத் திரவியங்கள், மெத்தைகள் ஆகியவற்றுடன் ஒரு கோடரி, ஒரு சுத்தியலையும் வாங்கினார். தன் பழைய துணிமணிகள், மோட்டார் சைக்கிள் மின்கலன்கள், வாங்கிய வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை ஐந்து பயணப்பெட்டிகளில் அடுக்கி வைத்தார். பொருட்களை லாரி ஒன்றில் சிவபிரகாஷ் ஏற்றியபோது, அவரின் சகோதரர் அவரை வழிமறித்தார்.
தன் திட்டத்தை சிவபிரகாஷ் சொல்லியதை அடுத்து, அவர் மனதை மாற்ற சகோதரர் முயற்சி செய்தார். இதற்காக சிவபிரகாஷின் நண்பர்களின் உதவியையும் நாடினார். ஆனால் நண்பர்களின் அறிவுரையும் பலனளிக்கவில்லை.
அதிகளவு மது அருந்திவிட்டு சிவபிரகாஷ் வன்செயலில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், அருகில் புல்மீது சட்டையின்றி ராணுவக் கால்சட்டை, 'பூட்ஸ்' காலணியுடன் அமர்ந்திருந்த சிவபிரகாஷைக் கைது செய்தனர். சிவபிரகாஷ் முகத்தில் பச்சை, கருப்பு உருமறைப்பு களிம்பு பூசப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆடவருக்கு மருட்சி கோளாறு உள்ளது என்றும் அவர் ஆபத்தான ஒரு குற்றவாளி என்றும் அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.

