8 வயது மகனிடம் தகாத முறையில்
நடந்துகொண்ட ஆடவருக்குச் சிறை
தன் எட்டு வயது வளர்ப்பு மகனைத் தூக்கத்திலிருந்து எழுப்பியதுடன் சிறுவனிடம் ஆபாசக் காணொளி ஒன்றைக் காட்டினார் 39 வயது ஆடவர் ஒருவர். பின்னர், சிறுவனிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்டார் அந்த ஆடவர். நேற்று ஆடவருக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஐந்து பிள்ளைகளுடைய சிறுவனின் தாயாரை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார் அந்த ஆடவர். மே 2019ல் இரண்டு சகோதரர்களுடன் உறங்கிக்கொண்டிருந்த சிறுவனை ஆடவர் எழுப்பி குற்றங்களைப் புரிந்துவிட்டு அறையை விட்டுச் சென்றார். சென்ற ஆண்டு தனக்கு நடந்ததைப் பற்றி சிறுவன் தன் தாயாரிடம் கூறிய பிறகு அந்த 33 வயது மாது போலிசாரிடம் புகார் அளித்தார். ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்த சமயத்தில் குற்றம் புரிந்ததாக விசாரணையில் கூறியிருந்தார்.
முயிஸ்: அதிகாரி லஞ்ச ஊழல்
குற்றம் புரிந்ததாக ஆதாரமில்லை
ஹலால் சான்றளிப்பு தொடர்பில் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்ற (முயிஸ்) அதிகாரி ஒருவர் மீது கூறப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்ததில், சட்ட மீறல் நிகழ்ந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) கண்டறிந்துள்ளது.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கடந்த ஆண்டு முயிஸ் விசாரித்ததை அடுத்து சிபிஐபி விசாரணை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டது. தனக்கு ஒத்த தரநிலையைக் கொண்ட வெளிநாட்டு அமைப்புகளை, முயிஸ் ஹலால் சான்றளிப்புக்காக அடையாளம் காண்பது வழக்கம். இந்த அமைப்புகளின் உற்பத்திப் பொருட்கள் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்படும்போது அவை 'ஹலால்' முத்திரை பெற்றிருக்க வேண்டும், அல்லது இங்குள்ள முஸ்லிம்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். ஒரு சில அமைப்புகளைக் கடந்தாண்டு தன் பட்டியலிலிருந்து முயிஸ் அகற்றத் தொடங்கியபோது பிரச்சினையும் ஆரம்பித்தது. முயிஸ் பாரபட்சம் காட்டுவதாக 'ஏஷியா செண்டினல்' என்ற ஹாங்காங் செய்தி நிறுவனம், தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்ததை அடுத்து விசாரணை தொடங்கியது.

