கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியன்று குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகத் தம்மை தடுத்து வைத்திருந்தபோது போலிஸ் அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஆடவர் முன்வைத்த குற்றச்சாட்டை போலிஸ் படை மறுத்துள்ளது.
ஆடவரின் குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையிலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததிலும் அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை எனத் தெரியவந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் போலிசார் கூறினர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி யதற்காக முதலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திரு சீ கியான் பெங்கின் ரத்தத்தில் அனுமதிக்கத்தக்க மது அளவு இருந்தது தெரிய வந்ததும் அவர் விடுவிக்கப்பட்டார். போலிசார் தம்மைத் தாக்கியதாகவும் தம்மை சிறை அறையில் தடுத்து வைத்திருந்ததாகவும் கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டும் அவர்கள் அனுமதி தரவில்லை என்றும் திரு சீ கூறுவதைக் காட்டும் காணொளி தி ஒன்லைன் சிட்டிசன் ஏஷியாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
தமக்கு உணவு வழங்கப்படவில்லை என்றும் குடும்பத்தாருடன் தொடர்புகொள்ள அனுமதிக்கவில்லை என்றும் திரு சீ தெரிவித்தார். தமது இதயத் துடிப்பு அதிகரித்த போதிலும் போலிஸ் நிலையத்தில் இருந்த மருத்துவ ஊழியர்கள் அதை அலட்சியப்
படுத்தியதாக திரு சீ கூறினார். விடுவிக்கப்பட்டும் பல மணி நேரம் கழித்து தமது வாகனத்தை போலிசார் தம்மிடம் ஒப்படைத்ததாகவும் அவர் குறைகூறினார்.
திரு சீயின் குற்றச்சாட்டுகளை மறுத்த போலிசார், அதிகாலை 4 மணி அளவில் போலிஸ் கென்டோன்மண்ட் வளாகத்துக்கு திரு சீ கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரைத் தடுத்து வைக்கலாம் என்று மருத்துவ அதிராரிகள் உறுதி செய்ததும் அவர் தடுத்து வைக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
திரு சீக்கு எதிராக வேறு வழக்குகள் உள்ளனவா, அவரது வாகன ஓட்டுநர் உரிமமும் வாகன காப்புறுதியும் செல்லுபடியானதா என்பதை விசாரணை அதிகாரி உறுதி செய்ய வேண்டி இருந்ததாக போலிஸ் படை தெரிவித்தது.

