நிகழ்ச்சிக்கு முந்திய கொவிட்-19 பரிசோதனை
சினோவேக் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நிகழ்ச்சிக்கு முந்திய கொரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இடம்பெறாத கொவிட்-19 தடுப்பூசிகள், கொரோனா தொற்றிலிருந்து, குறிப்பாக இப்போது உலவிக்கொண்டிருக்கும் உருமாறிய 'டெல்டா' கிருமியிடமிருந்து பாதுகாப்பதில் எத்தகைய செயல்திறனைக் கொண்டுள்ளன என்பதற்கு போதிய சான்றுகள் இல்லாமல் இருக்கலாம் என்று அமைச்சு கூறியுள்ளது.
அவ்வகையில், சினோவேக் தடுப்பூசி சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இடம்பெறவில்லை.
"ஆகையால், பொதுமக்களின் நலன் கருதி, நமது கொவிட்-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இடம்பெறாத தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள் நிகழ்ச்சிக்கு முந்திய கொரோனா பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்," என்று அமைச்சு கூறியிருக்கிறது.
இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோர்க்கு, நேரடி நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள், திருமண விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முந்திய பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
அரசாங்கத்திடம் இருப்பில் இருக்கும் சினோவேக் தடுப்பூசிகளைப் பெற 24 தனியார் மருந்தகங்களுக்குச் சென்ற மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
தமது மருந்தகத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகக் கூறினார் ரோஃபி மருந்தகத்தைச் சேர்ந்த மருத்துவர் லியோங் ஹோ நாம்.
அவர்களில் பெரும்பான்மையோர் சீன நாட்டவர்கள் என்றும் 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிகளைத் தம்மால் தாங்க இயலாது என்று கருதிய முதியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒப்புநோக்க, புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்பதால் 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசி குறித்து சிலர் தங்களது கவலையை வெளிப்படுத்தினர் என்று சொன்னார் ஐகான் புற்றுநோய் மையத்தின் தலைமை நிர்வாகி செரீனா வீ.
மாறாக, சளிக்காய்ச்சல், இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிளுக்குப் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே சினோவேக் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
ஐகான் புற்றுநோய் மையத்தில் ஜூன் 21ஆம் தேதியில் இருந்து நாளொன்றுக்கு 25 முதல் 30 சினோவேக் தடுப்பூசிகள் போடப்படுவதாக திருவாட்டி செரீனா குறிப்பிட்டார்.
சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கு நுழைவுக் கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் எளிமையாக்கும் என்று சிலர் கருதுவதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் சினோவேக் தடுப்பூசி இன்னும் பதிவுசெய்யப்படவில்லை. பெருந்தொற்றுச் சிறப்பு அனுமதி வழிமுறையின்கீழ் சுகாதார அறிவியல் ஆணையமும் அதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை.
சிறப்பு அனுமதி வழிமுறைக் கட்டமைப்பின்கீழ் மட்டுமே அந்தத் தடுப்பூசி இங்கு போடப்படுகிறது.
இந்தக் கட்டமைப்பின்கீழ் வரும் தடுப்பூசிகளை தடுப்பூசிக் காய நிதியுதவித் திட்டம் உள்ளடக்கவில்லை. தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டபின் கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவோர்க்கு அத்திட்டம் ஆதரவு வழங்குகிறது.
சிறப்பு அனுமதி வழிமுறைக் கட்டமைப்பின்கீழ் வரும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வோரிடம், அவர்கள் தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டோரைப் போலக் கருதப்படாமல் போகலாம் என்பதை மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.
இது, சிறப்பு அனுமதி வழிமுறைக் கட்டமைப்பின்கீழ் வரும் சினோவேக் போன்ற தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் சாதக பாதகங்களை நோயாளிகள் கவனத்தில் கொள்ள அனுமதிக்கும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

