கொவிட்-19 நோயாளிகள் புழங்கிய இடங்களில் தங்கியிருப்போர், வேலை செய்வோர் அல்லது அவ்விடங்களுக்குச் சென்று வந்தோர்க்கு வர்த்தகங்களோ வளாக உரிமையாளர்களோ அனுமதி மறுக்க வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
கிருமி தொற்றியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைப் போன்ற அளவிற்குக் கிருமியைப் பரப்பும் அபாயத்தை அவர்கள் கொண்டிருப்பதில்லை என்பதே இதற்குக் காரணம்.
"புக்கிட் பாத்தோக் ஓட்டுநர் பயிற்சி மைய விவகாரத்தைப் பொறுத்தமட்டில், உடல்நலம் குன்றி இருந்தவர்கள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காமல் இருக்கவும் மருத்துவச் சிகிச்சையை நாடவும் அறிவுறுத்தப்பட்டனர்," என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
முன்னதாக, புக்கிட் மேரா வியூ பகுதியில் கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவானதால் அவ்வட்டாரத்தில் வசிப்பவர்கள் தனது வளாகத்தில் நுழைய புக்கிட் பாத்தோக் ஓட்டுநர் பயிற்சி மையம் தடை விதித்திருந்தது. உடனடியாகப் பயிற்சி வகுப்புகளை ரத்து செய்யுமாறு அறிவுறுத்திய அம்மையம், நுழைவு அனுமதி மறுக்கப்பட்டால் கட்டணம் திருப்பித் தரப்படாது என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இருமுறையும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட அவ்வட்டாரவாசிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையில் இருந்து ஓட்டுநர் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கலாம் என அம்மையம் கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. அத்துடன், அடுத்த சில நாள்களில் இடம்பெறவிருக்கும் வகுப்புகளை ரத்து செய்தோர்க்குக் கட்டணம் முழுவதுமாகத் திருப்பித் தரப்படும் என்றும் அம்மையம் தெரிவித்தது.

