கொவிட்-19 மருந்து: ஜிஎஸ்கே நிறுவனத்துடன் சிங்கப்பூர் ஒப்பந்தம்
இலேசானது முதல் மிதமான கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான 'சோட்ரோவிமாப்' மருந்து தொடர்பில் 'கிளாக்சோஸ்மித்கிளைன் (ஜிஎஸ்கே) சிங்கப்பூர்' மருந்து தயாரிப்பு நிறுவனத்துடனும் 'வீர் பயோடெக்னாலஜி' எனும் நோய்த்தடுப்பாற்றலியல் நிறுவனத்துடனும் சிங்கப்பூர் உடன்பாடு செய்துகொண்டு இருக்கிறது. செயற்கை உயிர்வாயு தேவைப்படாத, அதே வேளையில் கொரோனா தொற்று தீவிரமாக மாறக்கூடிய அபாயமிருப்போர்க்குச் சிகிச்சை அளிக்க 'சோட்ரோவிமாப்' மருந்து பயன்படுத்தப்படுகிறது. பெருந்தொற்று சிறப்பு அனுமதி வழிமுறையின்கீழ் இடைக்கால அனுமதி பெற, இப்போது அந்த மருந்து சுகாதார அறிவியல் ஆணையத்தின் ஒழுங்குமுறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஜிஎஸ்கே நிறுவனம் தெரிவித்தது. அவசர காலத்தின்போது 'சோட்ரோவிமாப்' மருந்தைப் பயன்படுத்த அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் கடந்த மே 26ஆம் தேதி அனுமதி வழங்கியது. மொத்தம் 583 நோயாளிகளிடம் அம்மருந்தைச் சோதித்துப் பார்த்ததில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அல்லது உயிரிழப்பது 85% குறைந்து இருப்பதை இடைக்காலத் தரவுப் பகுப்பாய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று ஜிஎஸ்கே நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூகத் தொற்று குறித்த விவரம் இனி வெளியிடப்படாது: அமைச்சு
கொரோனா தொற்றை எதிர்கொள்வதில் நாடு புதிய கட்டத்தை நோக்கிச் செல்வதால், சமூகத்தில் கொவிட்-19 தொற்றும் தனிமனிதர்களைப் பற்றிய விவரமும் இனி வெளியிடப்படாது என்று சுகாதார அமைச்சு அறிவித்து இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் வயது, வேலை, அவர்கள் சென்று வந்த இடங்கள், தொற்று உறுதியான நாள் போன்ற விவரங்கள் வெளியிடப்படா. மாறாக, கொரோனா பரவல் தொடர்பில் ஒவ்வொரு நாளும் அமைச்சு வெளியிடும் அறிவிப்பில், புதிதாக கிருமி தொற்றியோர் எண்ணிக்கையுடன் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றமும் இடம்பெறும். அத்துடன், கடுமையான நோய்த்தொற்றால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர், அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனரா இல்லையா என்ற தகவல்களும் தெரிவிக்கப்படும். கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு இம்முடிவை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து வருவோர்க்கு ஏழு நாள் தனிமை
ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வருவோர்க்கான எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன. கடந்த 21 நாள்களில் ஆஸ்திரேலியா சென்றிருந்து நாடு திரும்பும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை உடையோர் இங்கு வந்திறங்கியதும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். அதன்பின் அவர்களுக்கு ஏழு நாள்கள் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படும். அதன் முடிவில் அவர்கள் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இதனிடையே, சீனாவின் குவாங்டோங்கில் இருந்து வருவோரும் இங்கு வந்ததும் பிசிஆர் சோதனைக்கு உட்பட வேண்டும். சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானால், அவர்கள் ஏழு நாள்கள் இல்லத் தனிமையில் இருக்கத் தேவையில்லை. இந்த மாற்றங்கள் நாளை இரவு 11.59 மணியிலிருந்து நடப்பிற்கு வரவிருக்கின்றன.

