தாதியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நோயாளிகள் பங்கேற்கும் மெய்நிகர் நடை

2 mins read
0cb2597c-2492-41e6-b8db-0861989071df
-

எழுபத்திரண்டு வயதான திரு ரேமண்ட் பாலகிருஷ்ணன் சுமார் 20 முறை மாரடைப்புக்கு ஆளானார். 2017ஆம் ஆண்டில் முதன்முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இரண்டு மாதங்களுக்கு நினைவிழந்த நிலையில் இருந்தார். பின்னர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் அசிசி அந்திமகாலப் பராமரிப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு சக்கரநாற்காலியின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது.

ஓய்வுபெறுவதற்கு முன் கட்டுமானத் துறையில் கனமான பொருட்களை நகர்த்தும் பணியில் இருந்த திரு பாலகிருஷ்ணன், தற்போது மீண்டும் நடமாடுகிறார். அந்திமகாலப் பராமரிப்பு இல்லத்திலுள்ள தாதியர் தனக்குப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதில் காட்டிய அக்கறை அதற்குக் காரணம் என்று அவர் சொன்னார்.

தாதியருக்குத் தனது நன்றியைத் தெரிவிக்க, அசிசி இல்லம் முதன்முறையாக நடத்தும் "I Race for Nurses" மெய்நிகர் ஓட்டம் மற்றும் நடையில் திரு பாலகிருஷ்ணன் நேற்று கலந்து கொண்டார். அதன் மூலம் அடிடாஸ் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு நிதி திரட்டப்படும். அந்தத் தொகை, காலணிப் பற்றுச்சீட்டுகளாகத் தாதியருக்கு வழங்கப்படும்.

தாதியர் இல்லையென்றால் தனது உடல்நிலை இவ்வளவு முன்னேயிருக்காது என்றார் திரு பாலகிருஷ்ணன். அசிசி இல்லத்தின் வளாகத்தில் நடைபெற்ற மெய்நிகர் நடையில் மேலும் 19 நோயாளிகளும் பங்கேற்றனர். அவர்கள் மொத்தம் ஒன்பது கிலோமீட்டர் தூரம் நடந்தனர்.

ஒவ்வொரு முறை 100 கிலோமீட்டர் தூரம் நிறைவடையும்போது அடிடாஸ் சிங்கப்பூர் 100 வெள்ளி மதிப்புகொண்ட பற்றுச்சீட்டை ஒரு தாதிக்கு வழங்கும். பங்கேற்பாளர்கள் மொத்தமாக 15 ஆயிரம் கிலோமீட்டர் நடந்து முடிக்கும்போது இல்லத்திலுள்ள அனைத்து தாதியருக்கும் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

நடை நிகழ்ச்சி பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. 3,400க்கும் அதிகமானோர் அதில் கலந்துகொள்ள விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் சென்ற மாதம் தொடங்கின. நடை நிகழ்ச்சிக்குப் பொதுமக்கள் 18 ஆயிரம் வெள்ளிக்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளனர்.

அசிசி அந்திமகாலப் பராமரிப்பு இல்லம் தாம்சன் ரோட்டில் உள்ள மவுன்ட் அல்வர்னியா மருத்துவமனைக்கு அருகில் உள்ளது. அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று தாதியர் தினம். தங்களின் பணியையொட்டி தினந்தோறும் 12 கிலோமீட்டர் வரை நடக்கும் தாதியருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்குடன் நடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தான் செய்யும் வேலையைப் பிறர் கவனித்துப் பாராட்டுவதைத் தன்னால் உணரமுடிவதாக இல்லத்தில் பணிபுரியும் 32 வயது தாதி ரேச்சல் எடலீன் வோங் குறிப்பிட்டார். 12 ஆண்டுகளாகத் தாதியாக இருக்கும் அவர், அதிகம் நடப்பதால் காலணிகள் தாதியருக்கு முக்கியம் என்றார். பெருநடையில் நோயாளிகள் ஆனந்தமாகப் பங்கேற்றதைக் கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். நோயாளிகள் மகிழ்ச்சி யாக இருப்பது தனக்கும் மகிழ்ச்சி தரும் என்று அவர் சொன்னார்.

மெய்நிகர் நடை நாளை முதல் இம்மாதம் 31ஆம் தேதிவரை நடைபெறும். பங்கேற்க விரும்புவோருக்குக் கட்டணம் கிடையாது.