வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீட்டு விலைகள்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக உயர்ந்தன.
எனினும், அண்மையில் உச்சத்தை எட்டியிருந்த வீட்டு விலைகள் சற்று தணிந்து உள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட முன்னோட்ட மதிப்பீடுகள் காட்டின.
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்புநோக்க, கடந்த ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் மறுவிற்பனை வீட்டு விலைகள் 2.8 விழுக்காடு உயர்ந்தன. மாறாக, இவ்வாண்டின் முதல் காலாண்டில் வீட்டு விலைகள் 3 விழுக்காடு கூடியிருந்தன.
ஆண்டு அடிப்படையில், மறுவிற்பனை விலைகள் 10.8 விழுக்காடு அதிகரித்தன.
வீட்டின் விலை மதிப்புக்கு மேலாக கூடுதல் பணம் செலுத்த வீடு வாங்குபவர்கள் தயக்கம் காட்டுவதே விலை உயர்வு மெதுவடைந்ததற்கு காரணமாக இருக்கலாம் என்று சொத்து விற்பனை நிறுவனமான ஹட்டன்ஸ் ஏஷியாவின் ஆய்வுப் பிரிவு இயக்குநர் லீ சி டெக் கூறினார்.
2013ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் உச்சத்தை எட்டி இருந்தன. அவற்றுடன் ஒப்பிடுகையில், கடந்த காலாண்டின் விலைகள் வெறும் 2.1 விழுக்காடு குறைவு என்றார் ஆரஞ்சுடீ & டை நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ்டின் சுன்.
வீட்டு விலை உயர்வும் வீடுகளுக்கான தேவையும் இதே வேகத்தில் தொடர்ந்தால், 2013ல் இருந்ததைப்போல இவ்வாண்டு பிற்பாதியில் மறுவிற்பனை விலைகள் உச்சத்தை எட்டக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதல் பாதியில் வீட்டு விலைகள் 5.9 விழுக்காடு கூடின. இந்த விலை உயர்வு, 5 முதல் 9 விழுக்காடு வரையிலான தமது முழு ஆண்டு மதிப்பீட்டிற்குள் அடங்குவதாக திருமதி சுன் குறிப்பிட்டார்.
26ல் 20 நகரங்களில் மறுவிற்பனை இடைநிலை வீட்டு விலைகள் உயர்ந்ததாக அவர் கூறினார்.
மத்தியப் பகுதியில்தான் இடைநிலை வீட்டு விலைகள் ஆக அதிகமாக உயர்ந்தன. அவை 37.2 விழுக்காடு அதிகரித்து $738,000 ஆகின. மரின் பரேட்டில் விலைகள் 14.8 விழுக்காடு உயர்ந்து $520,000 ஆகின. கிளமெண்டியில் விலைகள் 13.5 விழுக்காடு அதிகரித்து $488,000ஐ எட்டின.
தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் வீடு வாங்குவோர் மறுவிற்பனை சந்தை பக்கம் திரும்பியுள்ளதாக திருமதி சுன் கூறினார். அதோடு, தனியார் சொத்துகளை விற்றவர்களும் மறுவிற்பனை வீடுகளை வாங்கி வருகின்றனர்.
இவ்வாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்புநோக்க, இரண்டாம் காலாண்டில் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை 8 விழுக்காடு குறைந்ததாக ஹட்டன்ஸ் ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் தெரிவித்தார்.
புக்கிட் மேரா, சுவா சூ காங், மரின் பரேட் ஆகிய வட்டாரங்ளைத் தவிர்த்து, மற்ற வீவக பேட்டைகளில் சற்று குறைவான வீடுகள் மறுவிற்பனையானதை அவர் சுட்டினார்.

