செய்திக்கொத்து

2 mins read
6311bb0f-d551-45d4-a7ec-b19ba278d6af
-

'பைனான்ஸ்' இணைய நாணய வர்த்தக சந்தை பற்றி ஆணையம்

'பைனான்ஸ்' (Binance) என்ற இணைய நாணயச் சந்தை வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக ஒழுங்குமுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவது பற்றி தனக்குத் தெரியும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவித்து உள்ளது. ஏற்புடைய நேரத்தில் தானும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அது தெரிவித்து உள்ளது. உரிமம் பெறுவதற்கான அதன் விண்ணப்பம் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

'பைனான்ஸ் ஏஷியா சர்விசஸ்' என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையான Binance.sg என்ற இணையத்தளம் சிங்கப்பூரர்களிடையே பிரபலமானது. இணைய நாணய வர்த்தகம் அதில் இடம்பெறுகிறது. பைனான்ஸ் நிறுவனம், அண்மைய மாதங்களில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல சந்தைகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பைனான்ஸ் ஏஷியா சர்விசஸ் நிறுவனம், இதர பைனான்ஸ் நிறுவனங்களிலிருந்து தனித்து செயல்படும் சட்டபூர்வ அமைப்பு என்று அதன் பேச்சாளர் கூறினார்.

12 வயது மகனை முகத்தில் குத்தியவருக்குத் தண்டனை

தன்னுடைய 12 வயது மகனின் முகத்தில் குத்திய ஓர் ஆடவருக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த 48 வயது ஆடவர் வயது முதிர்ந்த தனது தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

சிங்கப்பூர் சாங்கி விமானநிலையத்தில் வேலை பார்த்த அந்த ஆடவர், மதுபோதையில் இந்தக் காரியங்களைச் செய்தார். அவருடைய பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இரண்டு குற்றச்சாட்டு களின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதர இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவங்கள் 2019 டிசம்பர் 3ஆம் தேதி, இந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 உதவித்தொகை பெற தில்லுமுல்லு; ஆடவருக்குச் சிறை

பென்னி ஓங் ஹோங் பெங், 44, என்ற ஆடவர், 'டாவிஸ் கிட்டார்' என்ற நிறுவனத்தில் தான் பார்த்து வந்த வேலை யில் இருந்து சென்ற ஆண்டு ஜூலையில் விலகினார்.

ஆனால், கொவிட்-19 மானியம் பெறுவதற்காக, அவர் தன்னை வேலையில் இருந்து விலக்கிவிட்டதாகக் கூறும் பொய்க் கடிதம் ஒன்றை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் தாக்கல் செய்தார். அந்தக் கடிதம் போலியானது என்பதை அமைச்சு கண்டுபிடித்தது. அதனால் அவருக்கு உதவித்தொகை எதுவும் கிடைக்கவில்லை என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பதிலாக, ஏமாற்றும் நோக்கத்துடன் தில்லுமுல்லு காரியத்தில் ஈடுபட்டதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓங்கிற்கு பத்து வாரச் சிறைத்தண்டனைதான் கிடைத்தது.