மின்சாரம் தாக்கி மரணம்: எஸ்பி பவர் கிரிட்டுக்கு $150,000 அபராதம்

2 mins read
8f117b1e-0220-4123-aac1-71c68d21f95c
-

வேலையிட விபத்தில் மின்சாரம் தாக்கி சிங்கப்பூரர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தின் தொடர்பில், சிங்கப்பூர் பவர் குழுமத்தின் எரிசக்தி விநியோக நிறுவனமான எஸ்பி பவர் கிரிட் நிறுவனத்துக்கு நேற்று $150,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர் குளோபல் மரின் கன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குநரான திரு அசோகன் சுப்பிரமணியம். அவர் கிராஞ்சியில் உள்ள ஒரு துணை மின்நிலையத்தில் நடைபெறும் பணியில் உதவ கேட்டுக்கொள்ளப்பட்டார்.

துணை மின்நிலையம் அதிக சக்தி வாய்ந்த மின்சாரத்தைக் குறைந்த சக்தி வாய்ந்த மின்சாரமாக மாற்றும். அது வீடுகள், வர்த்தகக் கட்டடங்கள், பொதுச் சேவைகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.

அந்தக் குறிப்பிட்ட துணை மின்நிலையம் மூடப்படவிருந்ததால், அதன் தொடர்பான மின்சார வடங்களை அகற்றும் பணிகளில் உதவ திரு அசோகனும் அவரது ஐந்து ஊழியர்களும் 2017 செப்டம்பர் 24ஆம் தேதி காலை 10.15 மணிக்கு அங்கு கூடினர்.

எஸ்பி பவர்கிரிட்டின் தொழில்நுட்ப அதிகாரி திரு ஆதம் முகம்மது நூர், மின்சாரக் கம்பி வடங்கள் உள்ள பெட்டியைத் திறந்து விட்டார். திரு அசோகனும் அவரது ஊழியர்களும் பணியைத் தொடங்கியபோது திரு ஆதம் அங்கிருந்து சென்று விட்டார்.

அப்போது அந்த மின்சாரக் கம்பிவட பெட்டியில் உள்ள மின்சாரக் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்தது. அது தொடர்பான பாதுகாப்பை உறுதி செய்ய எஸ்பி பவர்கிரிட்டைச் சேர்ந்த யாரும் அங்கில்லை என்று மனிதவள அமைச்சின் வழக்கறிஞர் முகம்மது ரியாசுதீன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பை உறுதி செய்ய யாரும் இல்லாத அந்தச் சமயத்தில் திரு அசோகன், மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கம்பியைத் தொட்டதும் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அசோகன் பின்னர் அங்கு மரணமுற்றார்.

மின்சாரம் பாயும் கம்பிகள் உள்ள பெட்டி பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்ய எஸ்பி பவர்கிரிட் ஊழியர் தவறி விட்டார் என்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் நேரடி மேற்பார்வையின்றி அங்கு வேலைகள் நடைபெற்றன என்றும் திரு ரியாசுதீன் விவரித்தார்.

மேலும் பாதுகாப்பாக வேலை நடைபெறுவதற்கு அந்நிறுவனம் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும் திரு ஆதம் அங்கிருந்து புறப்படுவதற்கு முன் மின்சாரம் பாயும் கம்பிகள் பற்றி ஊழியர்களிடம் தெரிவிக்காமல், கம்பிகள் உள்ள பெட்டியைப் பூட்டாமல் சென்று விட்டார் என்றும் விளக்கப்பட்டது.