ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் சிலரை நோக்கி இனவாதக் கருத்துகளை உரக்கக் கூறி, ஓர் இளையரைத் தாக்கிய 33 வயது ஆடவர் மீது நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.
அச்சம்பவத்தின் தொடர்பில் முகமது ஆரிஸ் அன்வர் அலி மீது பொது இடத்தில் தொல்லை தந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.
திரு கியென் டியோ யோங் காய், 21, எனும் பல்கலைக்கழக மாணவரை ஆரிஸ் குத்தியதாகவும் உதைத்தாகவும் கூறப்பட்டது.
மேலும், திரு செபாஸ்டியன் வோங் சீ சியான் என்பவருக்கு எதிராக தகாதச் சொற்களைப் பயன்படுத்தி அவரிடம் இனவாதக் கருத்துகளை உரக்கக் கூறியதாகவும் கூறப்பட்டது.
சம்பவம் கடந்த வியாழக்கிழமை பின்னிரவு 1.50 மணி அளவில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா எஃப் 2 கார் நிறுத்துமிடத்தில் நடந்தது.
திரு டியோவும் அவரது நண்பர்களும் சைக்கிள் ஓட்டி இரவைக் கழிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஒரு சைக்கிள் சக்கரத்தில் காற்றில்லை என்று தெரிந்தவுடன் வீடு திரும்ப முடிவு செய்த அவர்கள் தங்களுடைய சைக்கிள்களை வேனுக்குள் ஏற்றிக் கொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்தது.
தாக்கிய ஆடவரை மனநலப் பரிசோதனைக்காக தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்கப்போவதாக போலிசார் நேற்று காலையில் விடுத்த அறிக்கையில் கூறினர். அந்த சம்பவம் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் முன்னதாக தெரிவித்தார் இல்லத்தரசி திருவாட்டி இலீன் லீ,
ஆடவரை யாரும் சீண்டவில்லை என்றும் அவர் தமது மகனையும் இரண்டு நண்பர்களையும் நோக்கி இனவாதக் கருத்துகளை உரக்கக் கூறினார் என்றும் திருவாட்டி லீ குறிப்பிட்டிருந்தார்.

