சுமார் $9.23 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டதன் தொடர்பில் போலிசார் 334 பேரை விசாரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் 14 வயது இளையர்.
அது பற்றி நேற்று வெளியிட்ட அறிக்கையில். பல்வேறு மோசடிகள் உள்ளிட்ட 872 சம்பவங்களை விசாரித்து வருவதாக போலிசார் தெரிவித்தனர். சந்தேக நபர்களில் 225 பேர் ஆண்கள், 109 பேர் பெண்கள். அவர்கள் 14 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
வர்த்தக விவகாரங்களுக்கான பிரிவும் வேறு ஏழு போலிஸ் பிரிவுகளும் இணைந்து, ஜூன் 19 முதல் ஜுலை 2 வரை தீவு முழுவதும் நடத்திய நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
வர்த்தக நிறுவனங்கள், தொழில்நுட்ப உதவி, அரசாங்க அதிகாரிகள், சீன அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து போலி மின்னஞ்சல்கள் அனுப்பியவர்கள், இணையத்தில் காதல் வலை விரித்தவர்கள், ஆகியவற்றுடன் மின்வர்த்தகம், முதலீடு, வேலைகள், கடன், போலி சூதாட்டத் தளங்கள் தொடர்பான மோசடிகளில் ஈடுபட்டோர் அதில் அடங்குவர்.
மோசடி செய்தது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, கள்ளத்தனமான பணப் பரிமாற்றத்துக்கு உதவியது ஆகிய குற்றங்களின் தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
குற்றவியல் சட்டத்தின் கீழ், மோசடி செய்தவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
லஞ்ச ஊழல், போதைப் பொருள் கடத்தல், இதர கடும் குற்றங் களுக்கு எதிரான சட்டத்தின் கீழ், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியவர்களுக்கு 10 ஆண்டு சிறை, $500,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.