நாட்டு அடிப்படையிலான பாகுபாடு தொடர்பில் கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 170 புகார்களை நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி கையாண்டது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவற்றில் கிட்டத்தட்ட பாதிப் புகார்கள், மொத்த, சில்லறை வணிகம், நிர்வாக, ஆதரவு சேவைகள், பிற சேவைத் துறைகளில் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.
அப்புகார்களை விசாரித்த முத்தரப்புக் கூட்டணி, நியாயமானவையாகக் கருதிய புகார்களை அமலாக்க நடவடிக்கைக்காக மனிதவள அமைச்சிடம் அனுப்பியது.
"பாகுபாடான ஆளெடுப்பு நடைமுறைகள் சகித்துக்கொள்ளப்பட மாட்டா. அனைத்து நிறுவனங்களும் நியாயப் பரிசீலனைச் சட்டமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைக்குத் தொடர்பில்லாவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது," என்று அமைச்சர் டான் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆளெடுப்பில் பாகுபாடு காட்டும் நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகளை அரசாங்கம் கடந்த ஆண்டு ஜனவரியில் கடுமையாக்கியது. அதன்படி, தவறிழைக்கும் நிறுவனங்களுக்கான வேலை அனுமதிச்சீட்டுச் சிறப்புச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்படும் காலம், குறைந்தது 12 மாதங்களில் இருந்து 24 மாதங்கள்வரை என உயர்த்தப்பட்டது.
அத்துடன், வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளூர்வாசிகளுக்கு அதிக கால அவகாசம் அளிக்கும் விதமாக, வேலை அனுமதிச்சீட்டு கோரி விண்ணப்பிக்குமுன் 'மைகரியர்ஸ்ஃபியூச்சர்' தளத்தில் வேலை குறித்த விளம்பரம் இடம்பெற்று இருக்க வேண்டிய குறைந்தபட்ச காலம் 14 நாள்களில் இருந்தது 28 நாள்களாக உயர்த்தப்பட்டது.

