ெகாவிட்-19 சூழலில் பிடிஓ எனப்படும் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளின் கட்டுமானம் தாமதமடைந்தால் அதற்கான பதிவை ரத்து செய்யலாம். அவர்கள் தண்டத்தொகை எதுவும் செலுத்த வேண்டியிருக்காது.
இதன் தொடர்பில் முன்பதிவை ரத்து ெசய்வோர் வீடமைப்பு வளர்ச்சி கழகத்திடம் முறையிடலாம். இதில் கழகம் அவரவர் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு திங்கள்
கிழமையன்று நாடாளுமன்ற கேள்விகளுக்கு தனது எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்துள்ளது.
இதற்கு உதாரணமாக, சிலர் தங்கள் அவசர வீட்டுத் தேவைக்காக பிடிஓ வீட்டு முன்பதிவை ரத்து செய்து மறுவிற்பனை சந்தையில் வீடு வாங்க எண்ணலாம் என்பதை கழகம் சுட்டியது.
கொவிட்-19 சூழலில் வீடு வாங்குவோர் எதிர்கொள்ளும் சவால்களை கழகம் அறிந்துள்ளது. அதனால், வீடு வாங்குபவரின் தனிப்பட்ட சூழல்நிலைக்கு ஏற்ப பதிவை ரத்து செய்தால் அதற்கான தண்டத் தொகை எதையும் வீவக வசூலிக்காது என அமைச்சு கூறியுள்ளது.
சாதாரணமாக ஒருவர் வீட்டுப் பதிவை ரத்து செய்தால், அவர் வீடு வாங்க விருப்பம் தெரிவித்து செலுத்தும் கட்டணத்தை இழக்க ேநரிடும்.
இந்தக் கட்டணம் $500 முதல் $2,000 வரை இருக்கலாம். அல்லது, வீடு வாங்கும் நடைமுறை எந்த நிலையை அடைந்துள்ளது என்பதைப் பொறுத்து அது வீட்டு விலையில் 5% தொகையாகக் கூட இருக்கலாம்.
மேலும், மீண்டும் மானியத்
துடன் வீடு வாங்க, அது பிடிஓ வீடாக இருந்தாலும் சரி அல்லது மறுவிற்பனை சந்தையில் வீவக வழங்கும் மானியங்களுடன் கூடிய வீடாக இருந்தாலும் சரி, ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டும்.
"இவை யாவும் வீடு வாங்க எண்ணுவோர் உண்மையிலேயே வீடு வாங்கும் எண்ணம் கொண்டிருப்பதை உறுதி செய்வது," என்று அமைச்சு கூறியது.
அத்துடன் அவசர வீட்டுத் தேவையுடைய மற்றவர்கள் வீடு வாங்கும் வாய்ப்பை தட்டிப் பறிக்காமல் இருப்பதற்காகவும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு விளக்கமளித்துள்ளது.
இதில் ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிபந்தனையை ரத்து செய்வதால், அவசர வீட்டு தேவையுடைய முதல் முறை வீடு வாங்குவோர், மறுவிற்பனை சந்தையில் வீடு வாங்க நேர்ந்தால் அவர்கள் மானியங்கள் பெற வேண்டும் என்பதற்காக என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியது.
இதன் தொடர்பில் தகுதியுள்ளோர் $160,00 வரை மானியம் பெறலாம் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
தற்போதைய நிலையில், கட்டுமானத் தொழில் துறையில் மனிதவள பற்றாக்குறை இருப்பதால், பல பிடிஓ வீட்டுத் திட்டங்கள் ஓராண்டோ அதற்கு மேலுமோ தாமதத்தை எதிர்நோக்கியுள்ளன.

