வேலையிடப் பாகுபாடு, தொல்லை ஆகியவற்றுக்கு எதிராக மேலும் வலுவான சட்டங்களுக்கு வேண்டுகோள்
வேலையிடத்தில் பாகுபாடு, தொல்லை ஆகியவை தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தப் படவேண்டும் என்றும் பணியிடத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க கண்காணிப்பு அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அவேர் (AWARE) எனும் மாதர் செயலாய்வுச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், உயர்கல்வி நிலையங்களில் தேசிய நன்னடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வரவேண்டும் என்றும் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் உதவியும் தகவல்களும் பெற தெளிவான நடைமுறையும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவேர் அமைப்பு தெரிவித்தது.
சிங்கப்பூர் அரசாங்கக் கொள்கைகளில் தாங்கள் பார்க்க விரும்பும் மாற்றங்கள் பற்றி இங்கு வசிக்கும் 191 பேருடன் சமூக அளவிலான கலந்துரையாடல்களை நடத்திய பின்னர், அந்த அமைப்பு கொள்கைப் பரிந்துரைகள் அடங்கிய பட்டியலை இன்று வெளியிட்டது. இவ்வாண்டு மார்ச் முதல் மே மாதம் வரை கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஒற்றைப் பெற்றோர், வெளிநாட்டு வாழ்க்கைத் துணைகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், வேலையிடத்தில் பாகுபாட்டுக்கு ஆளானவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துரையாடல்களில் பங்குபெற்றனர்.
பாலின சமநிலையை மேம்படுத்துவது குறித்து அரசாங்கம் இவ்வாண்டு வெள்ளை அறிக்கையை வெளியிடும். அதனை ஒட்டி சமநிலையை மறுஆக்கம் செய்தல் என்ற தலைப்பிலான அந்தக் கலந்துரையாடல்களை அவேர் நடத்தியது. இது தொடர்பாக, பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய பெரிய அறிக்கையை இம்மாதத்தில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்போவதாக அவேர் அமைப்பு தெரிவித்தது.
வேலையிடத் தொல்லையின் தொடர்பில் தேசிய அளவில் சட்டங்கள் இயற்றப்பட்ட வேண்டும் என்பது அமைப்பு முன்வைத்த பரிந்துரைகளில் ஒன்று. வேலையிடத்தில் அச்சுறுத்தல் நிகழும் பட்சத்தில்'டாஃபெப்' (Tafep) எனப்படும் நடுநிலையான வேலைவாய்ப்பு நடைமுறைகள் மீதான முக்கூட்டு வழிகாட்டுதல்கள், சர்ச்சை கையாள்தலுக்கான முத்தரப்புக் கூட்டணி (TADM) ஆகியவை எடுக்க முடியும் நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்த, அவற்றின் இணையத்தளங்களில் தேவையான தகவல்கள் இருக்கவேண்டும் என்றும் அவேர் பரிந்துரைத்தது.
வேலையிடப் பாதுகாப்புக்கு எதிராக முழுமையான சட்டப் பாதுகாப்பு இல்லை என்றும் பாகுபாடு குறித்து முறையிடும் வழிகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் கலந்துரையாடல்களில் பங்குபெற்றவர்கள் கருத்துரைத்தனர். அதனால் பிள்ளைப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் தாய்மாருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பாகுபாட்டுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் கட்டாயப் பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரை செய்தனர்.
உயர்கல்வி நிலைய வளாகங்களில் ஏற்படும் பாலியல் தொல்லையைக் கையாள ஒரே மாதிரியான செயல்முறைகள், நன்னடத்தை விதிமுறைகள் ஆகியவற்றுடன் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இதுபற்றி பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் பரிந்துரை செய்தனர். அத்துடன், வீடு வாங்குவதற்கு திருமணமான பெற்றோருக்கு இருக்கும் அதே நடைமுறைகளும் மானியங்களும் ஒற்றைப் பெற்றோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் விவாகரத்துகளில் ஜீவனாம்சத் தொகை ஒழுங்காக வழங்கப்படுவதை நிர்வகிக்க குழந்தை ஆதரவு அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்றும் அமைப்பு பரிந்துரை செய்தது. அத்துடன் அரசாங்க நிதி உதவி பெறுவதற்கான தகுதிகளைத் தளர்த்த வேண்டும் என்றும் சொத்துரிமைச் சட்டத்தில் திருமணத்துக்கு அப்பாற்பட்டு பிறந்தவர்கள் எனும் பிரிவினையை நீக்கவேண்டும் என்றும் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

