சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 452 பேர் உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2012க்குப் பிறகு ஆக அதிக எண்ணிக்கையாகும்.
சிங்கப்பூர் அபய ஆலோசனை சங்கம் (எஸ்ஓஎஸ்) நேற்று இந்தத் தகவலை வெளியிட்டது. 2019ல் பதிவாகியிருந்த 400 சம்பவங்களைவிட கடந்த ஆண்டு சம்பவங்களின் எண்ணிக்கை 13 விழுக்காடு கூடியது.
அனைத்து வயதுப் பிரிவுகளிலும் உயிரை மாய்த்துக்கொண்டோர் எண்ணிக்கை அதிகம் காணப்பட்டதாக எஸ்ஓஎஸ் கூறியது.
குறிப்பாக, 60 வயதுக்கும் மேற்பட்டோரிடையே கடந்த ஆண்டு 154 உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் பதிவாகின. இந்த வயதுப் பிரிவினரிடையே 1991க்குப் பிறகு இது ஆக அதிக எண்ணிக்கையாகும். 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 26 விழுக்காடு அதிகம்.
"நாட்டின் பொருளியல், மக்களின் வாழ்க்கைமுறை, மனநலம் ஆகியவற்றை கொவிட்-19 சூழல் கடுமையாகப் பாதித்துள்ளது. தற்போதைய சூழலை மூத்தோர் எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பது பற்றி நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம்," என்று எஸ்ஓஎஸ் தலைமை நிர்வாகி கேஸ்பர் டான் கூறினார்.
"நோய்ப் பரவல் சூழலில் தனிமையில் வாழும் மூத்தோர் பலர், நிதி நிலவரம் குறித்து கவலை அடைந்திருப்பதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
"மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வதில் மூத்தோர் எதிர்நோக்கும் சிரமமும் தனிமை உணர்வு நீடித்திருப்பதும் அவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்," என்று திரு டான் விவரித்தார்.
2019ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, கடந்த ஆண்டு மூத்தோரிடையே உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் அதிகரித்த போதிலும், தனது 24 மணி நேர உதவி எண்ணுக்கு அவர்களிடமிருந்து குறைவான அழைப்புகள் வந்ததாக எஸ்ஓஎஸ் தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு மார்ச் வரையிலான 2020 நிதி ஆண்டில், மூத்தோரிடமிருந்து எஸ்ஓஎஸ் சங்கத்திற்கு 4,455 அழைப்புகள் வந்தன.
ஒப்புநோக்க, 2019 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 4,816ஆக இருந்தது.

