கொவிட்-19 சூழலில் சம்பளப் பிரச்சினைகள், தவறான பணிநீக்கம்
சேர வேண்டிய சம்பளத் தொகை, தவறான முறையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டது ஆகியவற்றின் தொடர்பில் தங்கள் முதலாளிகள் மீது புகார் தெரிவித்து அதிகாரிகளின் உதவி நாடிய ஊழியர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் அதிகமாக இருந்தது.
உள்ளூர் ஊழியர்கள் தாக்கல் செய்த வேலை நியமனக் கோரிக்கைகள், மேல்முறையீடுகள் 2019 ஆம் ஆண்டில் 1,000 ஊழியர்களுக்கு இரண்டு என்ற அளவில் இருந்தன. அவை சென்ற ஆண்டில் 1,000 ஊழியர்களுக்கு 2.17 ஆகக் கூடின.
ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவருகின்றன.
தாக்கலான கோரிக்கைகளில் பெரும்பாலானவை சம்பளம் தொடர்பானவை. குடியிருப்பு மற்றும் உணவுச் சேவை, தொடர்பு தகவல், கட்டுமான தொழில்துறைகளில்தான் இத்தகைய கோரிக்கைகள் அதிகம் தாக்கலாகின.
கொவிட்-19 காரணமாக பொருளியல் முடக்கம் நடப்புக்கு வந்தபோது, இவற்றில் சில துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதன் காரணமாகவே அடிப்படை சம்பளம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று தெரிகிறது.
மனிதவள அமைச்சு, சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதற்கான முத்தரப்பு குழு ஆகியவற்றிடம் சென்ற ஆண்டு மொத்தம் 8,697 வேலை நியமன கோரிக்கைகளும் மேல்முறையீடுகளும் தாக்கலாயின.
அவற்றில் ஏறத்தாழ 59 விழுக்காடு அல்லது 5,142 புகார்கள் உள்ளூர் ஊழியர்களிடம் இருந்து வந்தவை.
அதேவேளையில், வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து வந்த இத்தகைய கோரிக்கைகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு பெரிதும் குறைந்ததாக இந்த அமைப்புகளைச் சேர்ந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
புகார்களில் ஏறத்தாழ 83 விழுக்காடு சம்பள கோரிக்கைகளாக இருந்தன. ஏறக்குறைய 15 விழுக்காட்டுப் புகார்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பானவை.
சம்பளம் தொடர்பாக உள்ளூர் ஊழியர்கள் விடுத்த கோரிக்கைகள் சென்ற ஆண்டு அதிகரித்தன.
வெளிநாட்டு ஊழியர்களைப் பொறுத்தவரையில் இத்தகைய புகார்கள் குறைந்தன.
சம்பளம் தொடர்பான புகார்களில் ஏறத்தாழ 84 விழுக்காடு புகார்களுக்கு இரண்டே மாதங்களில் தீர்வு காணப்பட்டது. எஞ்சிய 16 விழுக்காடுப் புகார்கள் வேலை நியமனக் கோரிக்கை நடுவர் மன்றத்திற்கு அனுப்பப்பட்டன.
பொருளியல் சூழ்நிலை சரியில்லாமல் இருந்ததால் சம்பள நிபந்தனைகள் தொடர்பில் இணக்கம் ஏற்படுவது சிரமமாக இருந்தது என்று அமைச்சும் அந்தக் குழுவும் தெரிவித்தன.
இருந்தாலும் ஏறத்தாழ 92 விழுக்காடு ஊழியர்கள் தங்களுக்குச் சேரவேண்டிய சம்பளத்தை அந்தக் குழுவின் உதவியுடன் முற்றிலும் பெற்றுக் கொண்டுவிட்டனர்.
மற்றவர்களைப் பொறுத்தவரைபாதிக்கும் மேற்பட்டவர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியைப் பெற்றனர். எஞ்சிய 3 விழுக்காட்டினரில் பெரும்பாலானவர்கள் அதிக வருவாய் பிரிவினர். அவர்கள் ஊதியத்தைத் திரும்பப் பெறவில்லை.
மொத்தத்தில் மனிதவள அமைச்சும் முத்தரப்புக் குழுவும் சென்ற ஆண்டில் $15 மில்லியன் சம்பளத்தை மீட்டு அதை உரிய ஊழியர்களிடம் ஒப்படைத்தன.

