சிங்கப்பூரர்கள் தங்களுடைய கலாசார வேர்களைப் போற்றிப் பாதுகாக்க உதவும் நோக்கத்தில் இருமொழிக் கொள்கை உருவாக்கப்பட்டது.
இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த சமூகத்திற்கு அப்பாலும் செயல்பட்டு பொதுவான தேசிய அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று சிங்கப்பூர் முன்னோடித் தலைவர்கள் விரும்பியதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் சமூகப் பிரச்சினைகளும் கொந்தளிப்பும் நிலவிய 1966 காலகட்டத்தில் இருமொழிக் கொள்கை தோற்றுவிக்கப்பட்டது என்பதை அவர் சுட்டினார்.
ஒரே சமூகமாக நாம் கடைப்பிடித்து வரும் நன்னெறிகளைக் கருத்தில்கொண்டு இருமொழிக் கொள்கையைச் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
இனம், மொழி, சமயம் எப்படி இருந்தாலும் நியாயமான சமூகத்தை நாம் பலப்படுத்த முடியும். எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து நல்லிணக்கத்துடன் வசிக்க முடியும்.
ஒரே மக்களாக ஐக்கியத்துடன் நாம் முன்னேற முடியும் என்பதே நமது சிங்கப்பூர் அடையாளத்துக்கான திட்டவட்டமான அம்சங்கள் என்றார் அவர்.
டன்மன் உயர்நிலைப் பள்ளியின் 65வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங், சிங்கப்பூரர்கள் கவனமாக இல்லை என்றால் சிங்கப்பூரின் நல்லிணக்கம் வெகு விரைவில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதையே அண்மைய இன, சமய பதற்றச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தோற்றுவிக்கப்பட்ட முதல் சிறப்பு உதவித்திட்ட பள்ளிகளில் ஒன்றான டன்மன் உயர்நிலைப் பள்ளியின் பாரம்பரியம் பற்றியும் திரு ஹெங் குறிப்பிட்டார்.

