சிறுவன் மானபங்கம்:
ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
சிறுவனைப் பல முறை மானபங்கப் படுத்தியதாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 42 வயது சிங்கப்பூரரான அந்த ஆடவர், 2017, 2018ஆம் ஆண்டுகளில் தனது வேலையிடத்தில் சிறுவனை மானபங்கப்படுத்தியதாக ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன. ஆசிரியர், சிறுவன் இருவரின் விவரங்களையும் வெளியிடத் தடை உத்தரவு உள்ளது.
2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அந்த ஆடவர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கல்வியமைச்சு தெரிவித்தது. நேற்று முன்தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அடுத்த மாதம் ஐந்தாம் தேதியன்று அவரின் வழக்கு விசாரணைக்கு வரும். 14 வயதுக்குக் குறைவான ஒருவரை மானபங்கப்படுத்திய ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது மூன்றில் ஒன்றுக்கு மேலான தண்டனைகள் விதிக்கப்படலாம்.
வருங்காலத்தில் கிருமிப் பரவலைக் கையாள $100 பில்லியன் தேவை
வருங்காலத்தில் கிருமிப் பரவல் அடிக்கடி ஏற்படக்கூடும், இன்னும் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. அதை எதிர்கொள்ள இப்போதே அவசரமாக முதலீடு செய்யவேண்டும். அதற்கு கொவிட்-19 கிருமிப் பரவல் முடியும் வரை காத்திருக்கமுடியாது என்று வலியுறுத்தப்படுகிறது. நிலைமையைச் சமாளிக்க அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 100 பில்லியன் வெள்ளி தேவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை, உலக நாடுகள் செலவிடத் தயாராய் இருப்பதைவிட அதிகம் என்று அனைத்துலக நிபுணர் குழு ஒன்று, இத்தாலியின் வெனிஸ் நகரில் கூடிய உலகின் ஆகப் பெரிய பொருளியல்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்களிடம் சுட்டியது.
ஆண்டுதோறும் கிருமிப் பரவலைக் கையாள அரசாங்கங்கள் கூடுதலாகச் செலவிடத் தயாராய் இருக்கும் தொகையில் 700 மடங்கு தேவைப்படும் என்று ஜி-20 குழு சொன்னது. சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் குழுவின் தலைவர்களில் ஒருவர்.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் வேலை பயிற்சி உதவித் திட்டம்
கொவிட்-19 கிருமிப் பரவலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ திட்டம் ஒன்றைத் தொடங்குகிறது. வேலை தேடிக்கொள்ள உதவ திட்டம் அத்தகையோருக்கு அடிப்படை பயிற்சிகளை வழங்கும்.
'கோல்' எனப்படும் வேலை வாய்ப்புப் பயிற்சித் திட்டத்தின் மூலம் அடுத்த ஈராண்டில் குறைந்தது 550 பலனடைவர்.
18லிருந்து 59 வயதுக்கு உட்பட்ட சிங்கப்பூரர்கள் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
புக்கிட் பாத்தோக் திருட்டு: சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு
புக்கிட் பாத்தோக்கில் அங்கீகாரம் பெற்று வட்டித் தொழில் செய்பவரிடமிருந்து ஆயுதம் ஏந்தியபடி திருடியதாகச் சந்தேகிக்கப்படுபவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 30 வயதான சையத் ஷாஹ்ருல் மொஹிபுர் ரஹ்மான், கடந்த வியாழக்கிழமையன்று இரவு சுமார் 7.10 மணிக்கு புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31ல் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாகச் சொல்லப்படும் சையத், சுமார் 11 மணிநேரத்திற்குப் பின் கேலாங் லோரோங் எட்டில் கைதானார். இம்மாதம் 16ஆம் தேதியன்று சையத் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

