உலகின் தலைசிறந்த கப்பல் மையமாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக தனது நிலையைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது சிங்கப்பூர் என்று 2021 சின்ஹுவா-பால்டிக் அனைத்துலக கப்பல் மைய மேம்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது.
சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் லண்டன், ஷங்காய், ஹாங்காங், துபாய் ஆகியவை உள்ளன.
2020ல் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால், உலகளாவிய வர்த்தகத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தாலும், பட்டியலில் உள்ள முதல் ஐந்து இடங்கள் கடந்த ஆண்டைப் போலவே மாறாமல் இருக்கின்றன என்று உலகளாவிய கடல்துறை தரவு வழங்குநரான 'பால்டிக் எக்ஸ்சேஞ்ச்' நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
உலகின் தலைசிறந்த கப்பல் மையப் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதற்கு, அதன் துறைமுகத்தின் அளவு, அனைத்துலக கப்பல் இடைத்தரகர்கள், நிதியாளர்கள், வழக்கறிஞர்கள், காப்பீட்டாளர்கள், ஆதரவளிக்கும் அரசாங்கக் கொள்கைகள் போன்றவையே காரணம் என்று 'பால்டிக் எக்ஸ்சேஞ்ச்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு மார்க் ஜாக்சன் விவரித்தார்.
சிங்கப்பூரின் இந்தச் சாதனை குறித்து கருத்துரைத்த போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், "உலகின் மிகவும் பரபரப்பான கொள்கலன் மற்றும் எரிபொருள் நிரப்பும் மையமாகத் திகழும் சிங்கப்பூர் துறைமுகம், உலக அளவிலான வர்த்தகத்துக்கு இந்தக் கிருமித்தொற்று காலத்திலும் சிறந்த ஆதரவளித்துள்ளது.
"நமது அனைத்துலக கடல்துறை மையம், கப்பல் நிறுவனங்களின் வலுவான ஆதரவுடன் துடிப்பான சந்தை இடமாகத் திகழ்கிறது. மேலும் அது கப்பல் இடைத்தரகு, கடல்துறை காப்பீடு, கப்பல் நிதி, கடல்துறைச் சட்டம், சமரசம் போன்ற கடல்துறை சார்ந்த சேவை களையும் வழங்கி வருகிறது," என்றார்.
"உலகளாவிய கடல்துறை தொழில்துறையில் சிங்கப்பூர் சிறந்து விளங்குவதற்கு, அதன் பல பங்காளிகள் வழங்கும் வலுவான ஒத்துழைப்பின் ஒருங்கிணைந்த முயற்சிகளே காரணம்," என்றார் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் (எம்பிஏ) தலைமை நிர்வாகி திருவாட்டி குவே டே ஹூன்.
"எம்பிஏ தனது பங்காளிகளுடன், கடலோடிகள் சந்திக்கும் உடனடிச் சவால்கள், மின்னிலக்கமயமாதலுக்கு தொழில்துறையின் உருமாற்றம், கரிமநீக்கம், ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றில் அணுக்கமாகப் பணியாற்றி, தொடர்ந்து ஆதரவளிக்கும்," என்றும் திருவாட்டி குவே சொன்னார்.
உலகின் தலைசிறந்த கப்பல் மையப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் மூன்று இடங்களை ஆசிய துறைமுகங்கள் வகிக்கின்றன என்பதைச் சுட்டிய சின்ஹுவா-பால்டிக் அறிக்கை, ஆறிலிருந்து ஒன்பதாவது இடங்களை முறையே ரோட்டர்டாம், ஹேம்பர்க், ஏதன்ஸ், நியூயார்க் ஆகியவை பிடித்தன என்றும் 10வது இடத்தில் இருந்த தோக்கியோவைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவின் நிங்போ துறைமுகம் அந்த இடத்தைப் பிடித்தது என்றும் தெரிவித்தது.
பட்டியலில் முதல் 43 இடங்களில் வந்த துறைமுகங்களின் சராசரி விகிதமான 58.5 புள்ளிகளைக் கடந்து சிங்கப்பூர் 97.2 புள்ளிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

