சிங்கப்பூரின் பொதுத் துறை அதன் நிலைத்தன்மை, குறைந்த கரிம வெளியேற்ற முயற்சிகள் ஆகியவை தொடர்பில் பெருமளவிலான மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது. சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிப்பது, தண்ணீர் மற்றும் எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பது, மற்ற நாடுகளுக்கும் முன்னதாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது ஆகியவை அவற்றில் அடங்கும்.
260,000 வீடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவு வரை 2030ஆம் ஆண்டுக்குள் பொதுத் துறை அதன் சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிக்க இருக்கிறது.
இந்த இலக்கை அடைய எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, 2035ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசாங்க அமைப்பு கார்களும் சுற்றுப்புறத்தை அவ்வளவாக மாசுப்படுத்தாத எரிபொருளைப் பயன்படுத்தும் கார்களுக்கு மாற்றப்படும். 2040ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைய வேண்டும் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டுக்குள் அரசாங்க அமைப்புகளின் புதிய கார்கள் புகை வெளியேற்றாத கார்களாக இருக்க வேண்டும்.
அரசாங்கம் கொண்டிருக்கும் இந்த இலக்குகள் குறித்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று அறிவித்தார். GreenGov.SG எனும் திட்டத்தின்கீழ் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக அரசாங்கம் எடுக்க இருக்கும் பல்வேறு திட்டங்களை அமைச்சர் ஃபூ மேற்கோள்காட்டினார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு ஏற்பாடு செய்த சுற்றுப்புறக் கருத்தரங்கில் திருவாட்டி ஃபூ இதுகுறித்து பேசினார்.
ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதற்கு முன்னதாகவே கரிம வெளியேற்றத்தைப் பொதுத் துறை குறைக்கும் என்று கடந்த மார்ச் மாதத்தில் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்குள் அதிகபட்ச கரிம வெளியேற்றம் குறித்து அரசாங்கத்துக்குச் சொந்தமான அலுவலகங்களும் பொதுக் கட்டமைப்புகளும் இலக்கு கொண்டுள்ளன. பாரிஸ் ஒப்பந்தப்படி, 2030ஆம் ஆண்டுக்குள் அதிகபட்சம் 65 டன் கரிம வெளியேற்றம், 2050ஆம் ஆண்டுக்குள் 33 டன் வெளியேற்றம் ஆகியவை சிங்கப்பூரின் இலக்காகும். அதன் பிறகு கரிம வெளியேற்றம் அறவே இல்லாமல் செய்வதே சிங்கப்பூரின் குறிக்கோளாகும்.
2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 52.5 மில்லியன் டன் கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியேற்றியது. இது உலகளாவிய கரிம வெளியேற்றத்தில் 0.1 விழுக்காடாகும்.
2030ஆம் ஆண்டுக்குள் எரிசக்தி, தண்ணீர் பயன்பாட்டையும் கழிவுகளின் அளவையும் குறைக்க பொதுத் துறை சவால்மிக்க இலக்குகளை வகுக்கும் என்று திருவாட்டி ஃபூ கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரியைவிட எரிசக்தி மற்றும் தண்ணீர் பயன்பாடு 10 விழுக்காடு குறைக்கப்படும். பொதுத் துறை வீசும் கழிவுப்பொருள் 30 விழுக்காடு குறைக்கப்படும்.
உணவகங்கள் உள்ள பொதுத் துறை கட்டடங்கள் 2024ஆம் ஆண்டிலிருந்து உணவுக் கழிவுப் பொருட்களை மற்ற கழிவுப் பொருட்களிலிருந்து பிரித்து அவற்றை மறுசுழற்சி செய்ய அனுப்பிவைக்கும்.