சிங்கப்பூர் நேற்று நண்பகல் நிலவரப்படி மேலும் 26 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,718ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 26 பேரில் எட்டுப் பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இவர்களில் ஐவர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள்.
எஞ்சியுள்ள மூவருக்கும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருக்கும் தொடர்பு இல்லை.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த 18 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
அவர்கள் சிங்கப்பூர் வந்ததும் தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
வெளிநாடுகளிலிருந்து வந்த 18 பேரில் 13 பேருக்கு சிங்கப்பூர் வந்ததும் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எஞ்சிய ஐவர் தனிமைப்படுத்தப்பட்டபோது அவர்களிடம் கொவிட்-19 அறிகுறிகள் தென்பட்டன.
இந்நிலையில், மேலும் ஒருவருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஏழு பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 20 கொவிட்-19 குழுமங்கள் உள்ளன. ஒவ்வொரு குழுமத்திலும் பாதிக்கப்பட்ட மூன்று பேரிலிருந்து 24 பேர் உள்ளனர்.
கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படாததால் இரண்டு இடங்கள் இனி கொவிட்-19 குழுமங்களாகக் கருதப்படாது.
தற்போது கொவிட்-19 காரணமாக 77 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர்களை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆறு பேருக்கு உயிர்வாயு சுவாசச் சாதனம் பொருத்தப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

