செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6b172352-48ff-4c42-98cc-0b1bf6b1651f
-

தடுப்பூசி விரும்பாத மூத்தோர்; தனிமை, கல்விநிலை காரணம்

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாத மூத்தோரில் பெரும்பாலானவர்கள் அவ்வளவாக பிறருடன் தொடர்பில் இல்லாதவர்கள் என்றும் குறைந்த கல்வி நிலையைக் கொண்டவர்கள் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் வெற்றிகரமாக மூப்படைதலுக்கான ஆய்வு நிலையம் நடத்தியது.

சிங்கப்பூர் லைஃப் பேனல் நடத்தும் வாராந்திர ஆய்வு மூலம் திரட்டப்பட்ட தரவுகளை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் 56 வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 7,230 பேர் பங்கெடுத்தனர்.

கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வு நடத்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த மூத்தோரில் 16.26 விழுக்காட்டினர் இன்னும் முதல்முறை தடுப்பூசியைக்கூட போட்டுக்கொள்ளவில்லை.

மற்ற வயதினரைவிட இந்த விகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லாத மூத்தோரில் பெரும்பாலானோர் தொடக்கப்பள்ளிக்கு மட்டும் சென்றவர்கள் அல்லது அறவே பள்ளிக்குச் செல்லாதவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஓரறை, ஈரறை, மூவறை ஆகிய வீடுகளில் வசிப்பவர்களில் 19 விழுக்காட்டினர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

நான்கறை, ஐந்தறை வீடுகளிலும் எக்சிகியூட்டிவ் கொண்டோமினியங்களிலும் வசிப்பவர்களில் 13.42 விழுக்காட்டினர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொள்ள எண்ணம் இல்லாதவர்கள் கிட்டத்தட்ட எட்டிலிருந்து ஒன்பது பேருடன் மட்டுமே தொடர்பில் இருப்பவர்கள்.

'தடுப்பூசி போட்டுக்கொள்ள மூத்தோரை ஊக்குவிக்க வேண்டும்'

கொவிட்-19 கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் தளர்த்தி வருவதால் அடுத்த 12 மாதங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நூற்றுக்கணக்கான முதியவர்கள் மரணமடையும் அபாயம் இருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொது சுகாதாரப் பள்ளியின் துணைத் தலைவரான இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே சளிக் காய்ச்சல் காரணமாக சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்வதாக அவர் கூறினார்.

ஆனால் கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்கொள்ள தரமுள்ள தடுப்பூசி இருக்கிறது என்று அவர் கூறினார்.

எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்ள முதியவர்களை அவர்களது குடும்பத்தாரும் நண்பர்களும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கொவிட்-19 சூழலிலும்

முதல்நிலை பட்டம் பெற்ற தாதியர்

முன்களப் பணியாளர்கள் என்கிற முறையில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டுக்கொண்டே முதல்நிலை தாதிமைப் பட்டத்தை தாதியர் சிலர் பெற்றுள்ளனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பகுதிநேர தாதிமைப் பட்டப் படிப்பை கடந்த ஜனவரி மாதத்திலும் மார்ச் மாதத்திலும் 70 தாதிமைத் துறை மாணவர்கள் முடித்தனர். அவர்களில் ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் மூத்த தாதியராகப் பணிபுரியும் 33 வயது திருவாட்டி பிந்தினயா சந்திரனும் ஒருவர்.

இந்தத் தாதிமைத் துறை மாணவர்களில் 40 விழுக்காட்டினர் முதல் நிலை பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தனியார் கல்வி நிலையமான சிங்கப்பூர் நீ ஆன் பயிற்சிக் கழகத்துடன் இணைந்து இந்தப் பட்டப் படிப்பு வழங்கப்பட்டது.