மின்னிலக்கமயமாதல், நீடித்த நிலைத்தன்மை போன்ற துறைகள் பற்றி துணைப் பிரதமர் ஹெங்
வர்த்தகம் போன்ற வலுவான ஒத்துழைப்பு உள்ள தற்போதைய துறைகளை விடுத்து, மின்னிலக்கமயமாதல், நீடித்த நிலைத்தன்மை போன்ற புதிய வளர்ச்சித் துறைகள் பற்றி ஆராய ஆசியான் அமைப்புக்கும் சீனாவுக்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறப்பான பொருளியல் அடிப்படைகளுடன், ஒட்டுமொத்தமாக இரண்டு பில்லியன் மக்களைக் கொண்டுள்ள ஆசியானும் சீனாவும், இந்தத் துறைகளில் நல்ல வளர்ச்சியடைய பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன," என்று திரு ஹெங் நேற்று நடைபெற்ற எதிர்கால சீனா பற்றிய உலகக் கருத்தரங்கில் பேசினார்.
"சீனாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொண்டிருந்தாலும் ஆசியான் ஒன்றுசேர்ந்து எல்லா பெரிய பங்காளிகளுடனும் ஒத்துழைப்பைக் கட்டிக்காக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் மோசமடைந்தாலும், அந்தச் சிக்கலில் ஆசியான் நாடுகள் மாட்டிக்கொள்ளாது," என்றார் திரு ஹெங்.
எதிர்கால சீனா பற்றிய உலகக் கருத்தரங்கில் அரசாங்க மற்றும் வர்த்தகத் தலைவர்கள் பங்கேற்று சீனா பற்றிய பல்வேறு விவகாரங்களை விவாதித்தனர்.
இந்த ஆண்டு கருத்தரங்குக்கு 'வழக்கத்துக்கு மாறானது' என்ற கருப்பொருளைத் தந்தது மிகப் பொருத்தமானது என்று குறிப்பிட்ட துணைப் பிரதமர், எதையும் முன்கூட்டியே கணிக்க முடியாத இன்றைய சூழ்நிலையில், நாம் மின்னிலக்கமயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற உலகின் கவனத்தைப் பெற்றிருக்கும் அம்சங்களில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
"நம்மால் எதிர்காலத்தைக் கணித்துக் கூறமுடியாது. ஆனால், நம்மால் ஒரு மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்க முடியும். அதில் சாதித்துக் காட்ட வேண்டும். ஆசியானைப் பொறுத்தவரையில், உத்திபூர்வ போட்டித்தன்மையில் மாற்றத்தைக் கொண்டு வருவது எங்கள் எண்ணமல்ல. ஆனால், ஆசியானை ஒரு திறந்த வட்டார மாக மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் வட்டாரமாக வைத்திருக்க நாம் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும்.
"இதில் எந்தப் பக்கம் சாய்வது என்பது கேள்வியல்ல. ஆனால், தெரிவுகளை நாமே தேர்வு செய்யக்கூடிய ஆற்றலைத் தக்கவைத்துக் கொள்வதுதான் முக்கியம்.
"அப்போதுதான் நாம் நமது ஒருங்கிணைந்த நலனை நோக்கிச் செல்ல முடியும். அதன் மூலம் நமது மக்களுக்குச் சிறப்பானவற்றை செய்ய முடியும்.
"தனது சொந்த நலன்களைக் கட்டிக்காப்பதில் இந்த வட்டார நாடுகள் வலுவாக காலூன்ற வேண்டும். அதுதான் ஆசியானின் மையத்தன்மையைச் சிறப்பாக எடுத்துக்காட்டும்," என்றார் துணைப் பிரதமர் ஹெங்.

