கான்: வர்த்தகத்தில் ஆசியானையும் சீனாவையும் இணைப்பதில் சிங்கப்பூர் பங்காற்ற முடியும்

2 mins read
4e9957cc-3f62-4f50-8b15-a26ccb2b1c68
-

நேரடியாகவும் மின்னிலக்க இணைப்பு மூலமாகவும் ஆசியான் பொருளியல்களுக்கும் சீனாவுக்கும் இடையே சிங்கப்பூர் ஒரு முக்கிய பாலமாக பங்காற்றி அவற்றுக்கிடையே வர்த்தக வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

எதிர்கால சீனா பற்றிய உலகக் கருத்தரங்கில் நேற்று உரையாற்றிய திரு கான், சீனா-சிங்கப்பூர் சொங்சிங் இணைப்புத் திட்டம் பற்றி பேசினார். அத்திட்டத்தின் மூலம் கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் சீனாவுக்கும் ஆசியானுக்கும் இடையே உணவு, மருத்துவ பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என்றார்.

சூசாவ் தொழிற்பூங்கா, தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரம் ஆகியவற்றுக்கு அடுத்து சிங்கப்பூர் அரசாங்கமும் சீன அரசாங்கமும் இணைந்து வழிநடத்தும் மூன்றாவது திட்டம் சீனா-சிங்கப்பூர் சொங்சிங் இணைப்புத் திட்டம்.

கடந்த ஆண்டுதான் ஆசியான் சீனாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளி என்ற நிலையை அடைந்தது. சீனாவோ ஆசியானின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றும் திரு கான் சுட்டினார்.

அதே கருத்தரங்கில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், "கொள்ளைநோய் நமது வாழ்க்கைப் பாணியை மாற்றியிருந்தாலும், தொழில்நுட்பத்திலும் புத்தாக்கத்திலும் மேம்பாடுகள் மெதுவடையவில்லை," என்றார்.

"இந்த நெருக்கடி காலம் நமது செயல்முறைகளில் புதிய அணுகுமுறையை ஆராய்ந்து அதன் மூலம் ஆக்கபூர்வமான, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வழிகளைக் கண்டறிய நமக்குள் புதிய உத்வேகத்தை துளிர்விட வைத்துள்ளது," என்றும் தமது உரையில் திரு ஓங் தெரிவித்தார்.