மவுண்ட் ஃபேபர் ரயில் திட்டம்: இதுவரை எந்த முடிவும் இல்லை

1 mins read
e8c295a2-5ff7-4b9d-9b47-e1e8b9aa0b15
-

மவுண்ட் ஃபேபர் மலையில் ரயில் வசதியை ஏற்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கழித்தும், அதன் கட்டுமானத்தைத் தொடங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கம்பிவடத்தால் இழுக்கப்படும் மற்றும் இறக்கப்படும் இந்த ரயில் முறை, 2019ல் நகர மறுசீரமைப்பு ஆணையத்தால் வெளியிடப்பட்ட தெற்கு நீர்முகப்பு பெரும்பாதை திட்டத்தில் இடம்பெற்றிருந்தது.

"வருகையாளர்களை மவுண்ட் ஃபேபர் மலையடிவாரத்திலிருந்து மலையின் உச்சிக்கு கொண்டு சென்று திரும்பும் கம்பிவட ரயில் சேவை 2023ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்பட்டு விடும் என்று மவுண்ட் ஃபேபர் பொழுதுபோக்குக் குழுமம் முன்னதாகத் தெரிவித்தது என்று ஆணையம் கூறியது.

"நாங்கள் 2019, டிசம்பர் 20ஆம் தேதி ஆணையத்திடம் திட்ட அனுமதி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தோம். அதற்கு முன்னதாக நாங்கள், சுற்றுப்புறவியல் தாக்க மதிப்பீடு, போக்குவரத்து தாக்க மதிப்பீடு, திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வு என மூன்று ஆய்வு முடிவுகளையும் சமர்ப்பித்திருந்தோம் என்றார் மவுண்ட் ஃபேபர் குழுமத்தின் பேச்சாளர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நகர மறுசீரமைப்பு ஆணையத்திடமும் தேசிய பூங்காக் கழகத்திடமும் மவுண்ட் ஃபேபர் பொழுதுபோக்குக் குழுமத்தின் விண்ணப்பம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. மூன்று மாதங்கள் கழித்து, "சம்பந்தப்பட்ட அமைப்புகள் விண்ணப்பம் குறித்து பரிசீலித்து வருகின்றன," என்று ஆணையம் பதிலளித்துள்ளது.