சூதாட்டச் சட்டங்களை இவ்வாண்டு பிற்பகுதியில் மாற்றப்போவதாகக் கூறியுள்ள உள்துறை அமைச்சு அது பற்றி கருத்துத் தெரிவிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இணையவழி சூதாட்டம், வீட்டில் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் சூதாடுவது, சூதாட்டக் கூறுகள் உள்ள விளையாட்டுகள் உள்ளிட்டவற்றில் மாற்றங்களை அமைச்சு முன்மொழிந்துள்ளது.
இணையத்தில் புதிதாக உருவாகும் சூதாட்டத் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கும் வகையில் சூதாட்டத்தின் வரையறையை மாற்றி அமைக்க அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன், விளையாட்டுக் கூடங்களில் இயந்திரத்தில் விளையாடுவது, காசு போட்டு விளையாட்டுப் பொம்மையை இயந்திரத்தில் எடுப்பது, மர்மப் பெட்டிகள் போன்ற சூதாட்டக் கூறுகள் உள்ள விளையாட்டுகளுக்கான பரிசுத் தொகை அதிகபட்சம் $100ஆக இருக்க வேண்டும் என்று அமைச்சு முன்மொழிந்துள்ளது. அதிகவிலையுள்ள பரிசுகளால் கவரப்பட்டு சூதாட்டத்தில் ஈடுபடும் சாத்தியத்தைக் குறைக்க அது உதவும்.
இணையத்தில் விளையாடிப் பெறும் மெய்நிகர்ப் பொருட்களை வெளியிடத்தில் கொடுத்து அதற்கு பதில் பணத்தை அல்லது பண மதிப்புள்ள பொருட்களைப் பரிசாகப் பெறுவதைத் தடுக்கவும் வகை யிலும் சட்டம் மாற்றப்படும்.
மேலும் புதிய சட்டத்திருத்தத்தில் வீட்டில் குடும்பத்தோடும் நண்பர்களோடும் சூதாடுவது அனுமதிக்கப்படும். அது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கம் என்பதையும் அதனால் சட்ட ஒழுங்குக்குப் பெருமளவு பாதிப்பு இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்வதாக அமைச்சு கூறியது. ஆனால் இணையத்தில் குடும்பத்தோடும் நண்பர் களோடும் சூதாடுவது அனுமதிக்கப்படாது. அத்துடன், வீட்டில் சூதாடுவதைப் பயன்படுத்தி சூதாட்டக் கும்பல்களுக்கு எதிராக கடும் சோதனைகளும் தண்டனைகளும் அறிமுகம் செய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சு கூறியது.
மேலும், பல்வேறு சூதாட்டச் சட்டங்களின் கீழ் விதிக்கப்படும் அபராதங்கள் சீரமைக்கப்படும்.
சூதாட்டச் சட்டங்களை சிங்கப்பூர் கடுமையாகவும் அதே நேரத்தில் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் அணுகுவதாக அமைச்சு கூறியது. எல்லாவிதமான சூதாட்டத்துக்கும் தடை செய்வது, சட்டமீறல்களைத்தான் அதிகமாக்கும் என்றும் அது குறிப்பிட்டது.
சட்டத்திருத்தங்கள் பற்றிய தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் பொதுமக்கள் அமைச்சுக்கு அனுப்பலாம்.

