நீல நிற சாஸ் அட்டை வைத்திருப்பவர்கள் வரும் 15ஆம் தேதி தொடங்கி, இவ்வாண்டு முழுவதற்கும் வியாழக்கிழமைகளில் என்டியுசி ஃபேர்பிரைஸ் கடைகளில் 3% விலைக்கழிவு பெறுவார்கள்.
குறைந்த சம்பளக்காரர் களுக்கு அந்த அட்டை தற்போது வழங்கப்படுகிறது.
ஃபேர்பிரைஸின் 149 கிளைகள், 84 யூனிட்டி மருந்தகங்கள், ஃபேர்பிரைஸ் ஆன் வீல்ஸ் வேன்கள் எல்லாவற்றிலும் விலைக் கழிவு வழங்கப்படும் என்று என்டியுசி ஃபேர்பிரைஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
ஒரு நாளில் ஒரு தடவையாக அதிகபட்சம் $200 வெள்ளி வரை வாங்க முடியும் என்ற நிபந்தனை உண்டு. அதாவது அதிகபட்சத் தொகையான $200க்கு பொருட்கள் வாங்கினால், $6 விலைக் கழிவு பெறலாம்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் அந்த விலைக்கழிவைப் பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் நீல நிற சாஸ் அட்டையை காசாளரிடம் காட்டவேண்டும், அல்லது கட்டணம் செலுத்துவதற்கான தானியங்கு இயந்திரங்களில் அதைப் பயன்படுத்த வேண்டும்.
குறைந்த சம்பளக்காரர்களுக்கு ஃபேர்பிரைஸ் கடைகளில் செலவுகளைக் குறைக்க உதவும் பொருட்டு இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாக ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.
மூத்தோருக்கும் குறைந்த சம்பளதாரர்களுக்கும் உதவ அது அறிமுகம் செய்துள்ள நான்காவது விலைக்கழிவுத் திட்டம் அதுவாகும்.
முன்னோடித் தலைமுறையினர், மெர்டேக்கா தலைமுறையினர், மூத்தோர் எனும் மூன்று பிரிவினருக்கு ஃபேர்பிரைஸ் கடைகளில் தற்போது 3% வரை விழுக்காடு விலைக்கழிவு வழங்கப்படுகிறது.
நீல நிற சாஸ் அட்டைதாரர் களுக்கான விலைக்கழிவு அளிக்கும் திட்டத்தால் தனக்கு இந்த ஆண்டு $500,000 செலவு ஏற்படும் என்று என்டியூசி பேர்பிரைஸ் கூறியது.
மற்ற திட்டங்களில் மூத்தோருக்கு வழங்கப்படும் விலைக் கழிவுகளாால் தனக்கு ஒவ்வோர் ஆண்டும் $10 மில்லியன் செலவு உண்டாவதாக அது தெரிவித்தது.
"கொவிட்-19 கிருமிப் பரவலால் ஏற்பட்டுள்ள நீண்டகால நிச்சயமற்ற சூழல், குறைந்த சம்பளங்கள் உள்ள குடும்பங்களைப் பாதித்துள்ளது," என்று என்டியுசி பேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சியா கியன் பெங் அறிக்கையில் தெரிவித்தார்.
நீல நிற சாஸ் அட்டைதாரர் களுக்கான விலைக்கழிவுத் திட்டம், உதவியை இன்னும் அதிகமாகத் தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இலக்காகக் கொண்டு சேவையாற்றும் என்றும் தங்கள் மளிகைத் தேவைகளைச் சமாளிக்க அந்தத் திட்டம் அவர்களுக்கு கூடுதல் விலைச்சேமிப்புகளையும் உதவியையும் வழங்கும் என்றும் திரு சியா கூறினார்.

