புக்கிட் பாத்தோக் பேருந்து நிலைய விபத்து தொடர்பில், 65 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுமையான காயத்தை ஏற்படத்திய அவசரச் செயலுக்காக அவர் கைதுசெய்யப்பட்டார். அது பற்றிய விசாரணை நடைபெற்று வருவதாக போலிசார் கூறினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி காயங் களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வீடு திரும்பிவிட்டதாக டவர் டிரான்சிட் நேற்று தெரிவித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு பதிலளித்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், 11 பேர் வீடு திரும்பிவிட்டதாகவும் நால்வர் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறினார்.
எண் 945 வழித்தடத்தில் இயங்கும் டவர் டிரான்ஸிட் நிறுவனத்தின் இரண்டு உள்சேவை பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புக்கிட் பாத்தோக் பேருந்து சந்திப்பு நிலையத்தில் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் மூன்று ஓட்டுநர்களும் 15 பயணிகளும் சம்பந்தப்பட்டு இருந்தனர்.
பயணிகள் அனைவரும் தடம் புரண்ட பேருந்தில் இருந்தனர். மற்ற பேருந்தில் எந்த பயணியும் இருக்கவில்லை.
இரு பேருந்துகளிலும் செல்லாத எஸ்பிஎஸ் டிரான்ஸிட் பேருந்து ஓட்டுநர் ஒருவரும் காய மடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் தகவல்தொடர்பு பிரிவு மூத்த துணைத் தலைவரான திருவாட்டி டாமி டான், நடைபாைதயில் நின்று கொண்டிருந்த அவர் பேருந்துகளில் ஒன்றால் காயம் அடைந்ததாகக் கூறினார்.
"அவர் மருத்துவமனையில் இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம், எல்லா உதவிகளையும் செய்து வருகிறோம்," என்று திருவாட்டி டான் நேற்று கூறினார்.
பயணிகள் இல்லாத பேருந்து சந்திப்பு நிலையத்தில் திரும்பியபோது விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மாலை 5 மணி அளவில் அந்த பேருந்து சந்திப்பு நிலையத்திற்குள் நுழைந்த இரண்டாவது பேருந்தில் மோதியது.
இரண்டாவது பேருந்து அங்கிருந்து உயரம் குறைந்த தடுப்புக் கம்பியில் மோதி, அதன் பக்கவாட்டில் சாய்ந்து அங்கிருந்த சாய்வுப் பாதையில் விழுந்தது. இந்த சாய்வுப் பாதை வழியாகத்தான் பேருந்துகள் நிலையத்தில் நுழைந்து வெளியேறுகின்றன.
விபத்தினால் சேவை இடையூறு எதுவும் ஏற்படவில்லை என்றும் பயணிகள் பாதிக்கப்படாத பேருந்து நிலையத்தின் பகுதியைத் தொடர்ந்து பயன்படுத்த முடிந்தது என்றும் டவர் டிரான்ஸிட் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னர், நிலைமை வழக்கநிலைக்குத் திரும்பியது," என்று அவர் கூறினார்.
விபத்தில் சிக்கிய பிற பயணிகள் 1800-248-0950 என்ற எண்ணில் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது feedback@towertransit.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது ஜூரோங் ஈஸ்ட், புக்கிட் பாத்தோக் பேருந்து சந்திப்பு நிலையங்களில் உள்ள பயணிகள் சேவை அலுவலகங்களை அணுகலாம்.
எட்டு பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும், நால்வர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும், இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஞாயிற்றுக்கிழமை கூறியது.
மருத்துவமனையில் உள்ள இரு வரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் இருவரும் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் டான் டோக் செங் மருத்துவமனை நேற்று கூறியது.

