கப்பல் தொழில்துறை ஆற்றல் குறைபாடுகள் அகல புதிய தகவல் பகிர்வு இணையத்தளம்

கப்பல் தொழில்துறை ஆற்றல் குறைபாடுகள் அகல புதிய தகவல் பகிர்வு இணையத்தளம்

3 mins read
bca14bb6-8c8c-43da-80e2-3b686610344e
-

கப்பல் தொழில்துறையின் செயல்திறன் பலவீனங்களைக் குறைக்கும் நோக்கத்தில் புதிய மின்னிலக்க உள்கட்டமைப்புச் சேவை நடப்புக்கு வர இருக்கிறது.

சரக்குகளைக் கையாளுவதில் உள்ள ஆற்றல் குறைபாடுகளை அது சரளமாகப் போக்கும்.

தளவாடப் போக்குவரத்து தொழில்துறையினரின் செயல்திறனைத் தலைசிறந்த நிலைக்குக் கொண்டு செல்லும்.

இதன் மூலம் ஆண்டுதோறும் சிங்கப்பூரின் சரக்கு, சேவை விநியோக ஏற்பாட்டு முறைக்கு US$150 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பு கூடும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

'சிங்கப்பூர் வர்த்தக தகவல் பரிவர்த்தனைத்தளம்' என்று குறிப்பிடப்படும் அந்தச் சேவை இந்தத் தொழில்துறையின் ஒரு முன்னேற்றம் என்று அவர் வர்ணித்தார்.

இந்தத் துறையின் ஆற்றல் இப்போது குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைவாக இருக்கிறது.

தளவாடப் போக்குவரத்து துறையினர் கிடங்குகளிலும் பணிமனைகளிலும் அடிக்கடி தேக்கத்தைச் சந்திக்கிறார்கள் என்பதை துணைப் பிரதமர் சுட்டினார்.

விநியோகக் கட்டமைப்பில் சரக்கு எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் முற்றிலும் திட்டமிட்டுச் செயல்படுவது அவர்களுக்கு இயலாததாக இருக்கிறது என்றார் திரு ஹெங்.

பல்வேறு படிவங்களைக் கப்பல் துறையினர் அடிக்கடி பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. கொள்முதல்காரர்கள் தங்களுடைய தருவிப்பு ஆணைகளைத் துல்லியமாக பின்தொடர்ந்து கண்டறியவும் முடியவில்லை. பொதுவான மின்னிலக்கத் தகவல் உள்கட்டமைப்பு வசதி இருக்குமானால் அதன்மூலம் நிறுவனங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

சரக்கு இருக்கும் இடத்தை துல்லியமாக அவர்கள் உடனே தெரிந்துகொள்ளவும் வழி ஏற்படும்.

இதனால் இந்தத் தொழில்துறையினர் சரக்குகளைக் கையாளுவதிலும் பல நடவடிக்கைகளை திறம்பட நிறைவேற்றுவதிலும் முழு ஆற்றலுடன் திகழ முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துணைப் பிரதமர் திரு ஹெங், நேற்று நடந்த ஆசிய தொழில்நுட்ப சிங்கப்பூர் உச்சநிலை கூட்டத்தில் இந்தப் புதிய சேவை பற்றி அறிவித்தார். இது தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், விநியோக மின்னிலக்கக் கட்டமைப்புச் செயல் கூட்டணி ஆகிய இரண்டு அமைப்புகளின் யோசனையில் உதித்த திட்டமாகும்.

எதிர்கால தகவல்தொடர்பு களுடன் தொடர்புடைய ஆய்வு மற்றும் உருவாக்க முயற்சிகளுக்கான செயல்திட்டங்களுக்காக சிங்கப்பூர் $68.7 மில்லியன் தொகையைச் செலவிடும் என்றும் நேற்றைய கூட்டத்தில் திரு ஹெங் அறிவித்தார்.

அடுத்த தலைமுறைக்கான இணையப் பாதுகாப்பு, இயந்திர மனிதன், தகவல்தொடர்பு உள்கட்டமைப்புகள் ஆகியவற்றுடன் பல முன்னோடி திட்டங்களும் ஆராயப்படும் என்றார் அவர்.

இந்தத் துறையின் ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்க இந்தத் தொகையில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார். அந்தப் புதிய திட்டம், எல்லை கடந்த ஆய்வு தொடர்புகளைப் பலப்படுத்துவதிலும் ஒருமித்த கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் வர்த்தக தகவல் பரிவர்த்தனை என்பது ஓர் இணையத் தளமாகும். விநியோகத் தொழில்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் வர்த்தகம் பற்றிய தகவல்களை அதில் பகிர்ந்துகொள்ளலாம்.

அந்த இணையத்தளம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முற்றிலும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் பரிவர்த்தனை தளத்தின் மூலம் பகிர்ந்துகொள்ளும் தகவல்களைக் கொண்டு இந்தத் தொழில்துறையினர் சரக்கு போக்குவரத்தை தொடக்கம் முதல் பல நிலைகளிலும் திறம்பட திட்டமிட்டுச் செயல்பட முடியும்.