சிங்கப்பூரில் ஆசியான் காப்பிப் பயிலகம் அமைகிறது

சிங்கப்பூரில் ஆசியான் காப்பிப் பயிலகம் அமைகிறது

2 mins read
b15d0d68-3536-4e7d-b5c6-7211ec11ce43
-

சிங்கப்பூர் காப்பிச் சங்கம், ஆசியான் காப்பி கூட்டமைப்புடன் சேர்ந்து சிங்கப்பூரில் ஆசியான் காப்பிப் பயிலகம் ஒன்றை இந்த ஆண்டு முடிவில் அமைக்கும்.

அந்தப் பயிலகம் சிங்கப்பூர் காப்பிச் சங்கத்திற்கு ஏற்ப காப்பி தரச் சான்றிதழ் செயல்திட்டங்களைப் போதிக்கும்.

பயிற்சி அளித்து, சான்றிதழ் அளித்து தலைசிறந்த காப்பி வல்லுநர்களை அது உருவாக்கும்.

ஆசியான் காப்பிப் பரிவர்த்தனை செயல்திட்டம் ஒன்றையும் அந்தப் பயிலகம் நடைமுறைப்படுத்தும். இந்தப் பரிவர்த்தனை செயல்திட்டம் ஆகஉயர்தர காப்பி யைத் தரப்படுத்துவதற்கான ஆசியான் தரங்களை நிர்ணயிக்கும்.

சிங்கப்பூரில் அமையும் பயிலகம் இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு ஒரு மையமாகவும் செயல்படும்.

காப்பித் தொழில்துறையில் தேர்ச்சிகளையும் வேலை வாய்ப்புகளையும் மேம்படுத்திக்கொள்ள வட்டார நாடுகளுக்கு அந்தப் பயிலகம் உதவும்.

ஆக உயர்தர காப்பிக்கான மிக முக்கிய வட்டார வர்த்தக மையமாக சிங்கப்பூர் திகழ வேண்டும் என்ற இலக்குடன் சிங்கப்பூர் காப்பிச் சங்கம் செயல்பட்டு வருகிறது.

அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக புதிய பயிலகம் அமைகிறது. சிங்கப்பூர் காப்பித் தொழில்துறையின் இப்போதைய மதிப்பு $270 மில்லியனுக்கும் அதிகம்.

இதை வரும் ஆண்டுகளில் இரண்டு மடங்காக்குவதற்கான வாய்ப்புகள் பற்றியும் சிங்கப்பூர் காப்பிச் சங்கம் ஆராயும்.

மரினா பே சேண்ட்சில் நேற்று நடந்த சிங்கப்பூர் ஆக உயர்தர காப்பி ஏலம் 2021 நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் விக்டர் மா சங்கத் திட்டங்களைப் பற்றி கோடி காட்டி பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சரும் இரண்டாம் வர்த்தக தொழில் அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த வட்டாரத்தில் உயர்தர காப்பிக்கான உலக வர்த்தக மையமாகத் திகழக்கூடிய நல்ல நிலையில் சிங்கப்பூர் இருக்கிறது என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் இந்தோனீசியா, புருணை, ஜப்பான், ருவாண்டா, உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 21 தூதர்கள் கலந்துகொண்டனர்.

உலக காப்பிச் சந்தையின் மதிப்பு சென்ற ஆண்டில் $138 பில்லியனாக இருந்தது. அதில் ஆக உயர்தர காப்பி துறை ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்குப் பொறுப்பு வகித்தது.